Follow by Email

Sunday, 15 June 2014

உலக சினிமா : The Cranes are Flying (1957) - Russia

சமீபத்தில் பார்த்து ரசித்து மனதில் நின்ற ஓர் அயல்நாட்டு படைப்பான தெ கிரேன்ஸ் ஆர் ஃப்லாயிங், 1957 ஆம் ஆண்டு சோவியட் யூனியன் என்ற தற்போதைய ரஷியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.

Director Mikhail Kalatozov (28 December 1903-27 March 1973)
பெரும்பாலான திரை ரசிகர்களால் மறக்கப்பட்ட, இன்று வரை உலகின் முக்கியமான திரைக்காவியங்களாக கருதப்படும் The Unsent Letter (1959), I Am Cuba (1964), and The Red Tent (1971) போன்ற படைப்புகளை எடுத்தவாரன மிக்கையில் காலடொசோவ் - ஜோர்ஜியாவில் பிறந்த சோவியட் யூனியனைச் சேர்ந்த இயக்குனராவார்.பொருளாதார துறை மாணவரான இவர், பின்பு உதித்த சினிமா ஆர்வத்தினால் நடிப்புலகில் நுழைந்தார்.அதை படிப்படியாக மேம்படுத்திக்கொள்ளவே திரை ஒளிப்பதிவாளராக உருவாகினார்.1928 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் ஏதோ ஒரு பிரிவில் முக்கிய அங்கமாக வகித்தாலும் 50, 60 காலக்கட்டத்தில் இவர் இயக்கிய சில படங்கள் டெக்னிக்கல், கதைச்சொல்லலில் உலகளவில் நல்ல பெயரை எடுத்ததோடு கேன்ஸ், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வரிசையில் வெளிவந்து, திரை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த இடத்தை பெற்றதோடு கேன்ஸில் சிறந்த திரைப்படம் & நடிகைக்கான விருதை வாங்கிக்கொண்ட படைப்புதான் தெ கிரேன்ஸ் ஆர் ஃப்லையிங் ஆகும்.திரையில், வெரோனிக்கா, போரிஸ், இவானோவிச் ஆகிய பிரதான கதாபாத்திரங்களில் முறையே Tatyana Samojlova, Aleksey Batalov, Vasili Merkuryev ஆகியோர் கதையோடு பொருந்த, மேடை நாடக கதாசிரியரான Viktor Rozov அவர்கள் திரைக்கதையை புனைந்துள்ளார்.

@ The Cranes are Flying (1957) - Russia
@ A Film By Mikhail Kalatozov
@ Written By : Viktor Rozov (play & screenplay)
@ Stars : Tatyana Samojlova, Aleksey Batalov, Vasili Merkuryev

கதைச்சுருக்கம் 
இளம் ஜோடிகளான போரிஸ் மற்றும் வெரோனிக்கா மனப்பூர்வமாக இளமை இன்பத்தில் காதலித்து வருபவர்கள்.இருவரது வீட்டாருக்கும் இது தெரிந்திருந்தும், கண்டு காணாமல் இருக்கவே அவர்களின் உறவு சிறப்பாக தொடர்கிறது.
இப்படியே கடக்க, ஒரு நாள் போர் அறிவிப்பும் வருகிறது.போரிஸ் செல்ல வேண்டிய கட்டாயம்..இது வெரோனிக்காவுக்கு தெரிய வரவே அவள் உடைந்து போகிறாள்திருமணம் செய்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் யுத்தமா ? அவள் நெஞ்சம் துடிக்கவே, கண்கள் கலங்கவே போரிஸ் செல்கிறான்.. அவனுக்காக அவள் காத்திருக்கிறாள்..அவனை பற்றிய எந்த செய்தியும் கடிதமும் வரவில்லை...இதற்கிடையே வெரோனிக்காவின் வாழ்க்கை தடம் மாறுகிறது..புயலும், இடியும், பலத்த மழையும், பல அதிர்ச்சிகள் அவள் வாழ்வில்..

அதுவெல்லாம் என்னென்ன ? போரிஸ் என்ன ஆனான் ? இருவரும் சேர்ந்தனரா ? போன்ற அவசிய கேள்விகளும்க்கு படம் பார்ப்பதே உத்தமம்
@@@=============================@@==============================@@@

படத்தில் முதல் சில காட்சிகளே போதும்..மேற்க்கொண்டு நமது விழிகளை திரைக்குள் செலுத்துவதற்கு.இரண்டு காதலர்களின் தீண்டல், தூண்டல்களை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்கும்..பாதைகளில் காதலில் துள்ளிக்கொண்டே நடந்துச்செல்ல மணிக்கூண்டை காட்டியப்படியே போடப்படும் ஓப்பனிங் கிரடிட் - கூட சுவார்ஸ்யம்தான்..

நாயகியின் விட்டை அடைந்ததும், பெற்றோருக்கு கேட்டுவிடும் என்ற மௌனமாக உரையாடும் பார்வைகள்..அழகு..அப்பா அம்மா தூங்குகிறார்கள் என தனது செருப்பை சுழற்றிவிட்டு, விளக்கை அனைத்தப்படியே அவர்களது பெட்டை எட்டிப் பார்த்துவிட்டு நாயகி வெரோனிக்கா செல்ல அவளது அப்பா சொல்லும் வசனம் "That's what love is..my dear:a harmless mental illness" ஒன்று போதாதா சுவைக்கூட ? அங்கே நாயகி என்றால் இந்தப் பக்கம் நாயகன் போரிஸ், மெதுவாக தன் பாட்டியிடம் பேசிக்கொண்டே அறக்குள் நுழைந்து: தனகு ஜேக்கெட்டை நாற்காலியில் வக்கும் பொழுது, பக்கத்தில் படுத்துறங்கும் ஆடவன் சொல்கிறான் "Did you tear it" அப்பொழுதுதான் புரிந்தது அந்த சட்டையும் அவனது இல்லையென்று..

  இப்படியே முதல் பத்து நிமிடங்களில் காதல் இன்பத்தில் குளிக்கும் போரிஸ், வெரோனிக்கா மற்றும் கண்டும்க் காணாமலும் இடைவெளி விட்டு பழகும் குடும்பத்தையும் வெறும் இரண்டு, மூன்று காட்சிகளில் அமைக்கப்பட்டிருப்பது அருமை..இது என்னவோ நல்ல காதல் படமாக இருக்குமோ என்ற நம்பிக்கையில் பார்க்க...நெஞ்சை பிசைத்தது மீதக்கதை.

அடுத்த காட்சியில் போர் அறிவிப்புக்கு பின், வெரோனிக்காவும் இவானோவிசும் சந்தித்து நடக்கும் அசைவுகள் நாசுக்காக எடுக்கப்பட்டிருக்கும்.. அவனுக்கு அவள் மீதான ஆசையும் வெளிப்படும் இடமது.லாவகமாக பேசி கையை அவள் கையில் வைக்கும் போது அவள் முகத்தில் தென்ப்படும் மாற்றம்..அருமையான தருணம்.அங்கே இசைக்கப்படும் பியானோ ஒலி..என்னவென்று சொல்ல..கச்சிதமாக பொருந்துகிறது.இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் என்னையும் ரசிக்கவைத்தது.படத்துக்கு இசை அத்தனை பலம்..அத நேர்த்தியாக காட்சிகள் ஊடே தடுமாறாமல் பரிமாறிய ரஷியாவின் சிறந்த இசை ஆளுமையான Mieczysław Weinberg அவர்களுக்கு காலம் கடந்த எனது நன்றிகள்

படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய நடிப்பம்சம் அந்த அம்மா.. வெரோனிக்கா என்ற கேரக்டரில் வாழ்ந்த Tatyana Samojlova - தான்..என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டது.அழகாகவும் நடிக்கிறார்..நல்ல நடிப்புக்கான தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்.கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றுவிட்டார்.இவர் நடிப்பில் வந்த Anna Karenina (1967) என்ற காதல் சித்திரத்தையும் டவுன்லோடு போடலாம் என உள்ளேன்..  

பிரபல திரை இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்ஸசிக்கும் ஃபோர்ட் கப்போலோவுக்கும் பிடித்த திரைப்படமான இதில், நடிப்பு என்பதை தாண்டி..புதுமையான கேமரா அசைவுகளுக்கும் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.ஹென்டத் ஹெல்ட் கேமராக்களை உபயோகித்து, ஒளிப்பதிவாளர் Sergey Urusevsky நிகழ்த்திய முயற்சிகள் இன்றுவரை திரையுலகம் மறக்க முடியாத வண்ணங்களே.இந்த அரிய வகை முயற்சியை இவர் ராணுவத்தில் கேமராமேனாக இருந்த பொழுது கற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது.முதல்க்கட்ட காட்சிகளில் போரிஸ் மேலே வெரோனிக்காவை பார்த்து கத்தியப்படியே இசையோடு படிக்கட்டில் ஏறிச்செல்லும்போது ஆரம்பமாகும் ஒரு வகை வசீகரிப்பு இறுதி வரை நிலவுவது படத்துக்கு மேலும் ஒரு உறுதி.   

சேவிங்க் பிரைவட் ராயன், ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற படங்களை பார்த்தப் பிறகு, என் மனதில் நீண்ட நாட்களாக உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வியை மீண்டும் ஒரு முறை தட்டி எழுப்பியது இத்திரைப்படம். "போர் என்பது உயிர்களை எடுப்பதா ? அல்லது உயிர்களை காப்பாற்றிக் கொடுப்பதா ?" என்பதே அந்த எண்ணம்.உண்மைதான், என் வயதில் எத்தனையோ யுத்தங்களை, இனப்படு கொலைகளை தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் போன்றவைகளின் வழியே கண்ணார காதார எத்தனையோ..பார்த்து..வருந்திய நாட்கள் உண்டு..ஏன் இதுவெல்லாம்..?? 

பெற்ற மகனை போருக்கு அனுப்பி வைத்துவிட்டு, கண்கள் கலங்கி..தினம் தோறும் ஏங்கித்தவிக்கும் குடும்பங்கள் எத்தனை ? காதலனையும், கணவனையும் பிரிந்துவிட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு நின்ற வெரோனிக்கா-க்கள் எத்தனையோபடத்தின் இறுதி காட்சியை இங்கு விவரிக்க முடியாமல் தவிக்கிறேன்..அவ்வளவு மென்மையான மனதை உருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.ஒரு சந்தோஷமான முடிவை சோகத்தோட காட்டிட முடியுமோ ? பிளிஸ் வாட்ச் திஸ் மூவி.

மேற்க்கூறிய பல விடயங்கள் சிலருக்கு மிகைப்படுத்திய வண்ணமாக தோன்றலாம்.அப்படியே இருந்தாலும், ஒரு நல்ல சினிமாவை பலரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதியுள்ளேன்.தாமதமானாலும் சரி, பலரும் தங்களது வாழ்நாளில் தவற விடக்கூடாத படமாக பரிந்துரைச்செய்கிறேன்.

IMDB : 8.2
MY RATING : 8.3 / 10

உங்கள் ஆதரோவோடு,


Friday, 13 June 2014

Summertime (1955) : அழகிய பயணத்தில் ஒரு காதல் நாடகம்

உலகின் தலைச்சிறந்த திரை இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் டேவிட் லீன் என்ற இங்கிலாந்து படைப்பாளியின் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

மாஸ்டர் ஒஃப் எபிக் என்று சொல்லும் அளவுக்கு இவரது திரைப்படங்கள், உயரிய கோணங்களில் பல வண்ணம் கவர் காட்சிகளோடு நம்மை கிரங்கடிக்கும் வகையில்
லோரன்ஸ் ஒஃப் அராபியா, தெ பிரிட்ஜஸ் ஒஃப் குவாய்டோக்டர் ஸிவாகோ தலைச்சிறந்த படைப்புகளாக விளங்குகிறது,

.தனது ஒவ்வொரு படங்களிலும் லீன் எடுக்கும் அபாரமான முயற்சிகளும், அதை சிறப்பாக அமைக்கச் செய்ய எடுத்துக்கொள்ளும் கால நேரங்களும் அயராத உழைப்பும் நம்மை ஆச்சரியப்படவைக்கக்கூடியவை.. யார் வந்து என்னை கேட்பினும் சொல்வேன், ஒளிப்பதிவை ஒளிப்பதிவாக பார்க்க விரும்பினால் டேவிட் லீனின் படங்களை பாருங்கள் என்று..அவ்வளவு நேர்த்தியாக கண்களை பித்தம் பிடிக்க செய்யும் அழகியலோடு காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்.

அவரது படைப்பில் நான் பார்த்த முதல் ஓவியம் டாக்டர் ஷிவாகோ..மறக்க முடியவில்லை என்னால் அந்த காவியத்தை.நீங்கள் பார்த்த அனுபவம் இருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்..அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கண்டு ரசித்த இன்னொரு படம்தான் சம்மர்டைம்

புகழ்பெற்ற அமெரிக்க நடிகையான Katharine Hepburn அவர்கள் ஜேன் ஹட்சனாக நடித்த படம்.Arthur Laurents என்பவரின் மேடை நாடகத்தை தழுவி, H.E. Bates மற்றும் டேவிட் லீனின் திரைக்கதையில் சினிமாவாக உருவான அந்த வருடம் 1955..

@ Summertime (1955) - An American/British Production
@ A Film By David Lean
@ Writen By : H.E. Bates, David Lean, Based on a play by Arthur Laurents
@ Stars : Katharine Hepburn, Rossano Brazzi, Darren McGavin

     ஜேன் ஹட்சன் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது பெண்ணாவார்.ஓர் அழகிய கோடையில் தனது நீண்டக்கால கனவான இத்தாலியின் பிரசித்திப் பெற்ற நகரான வெனிஸுக்கு டிரைனில் வருவதோடு முதல் காட்சி தொடங்குகிறது.பல வருடங்களாக தனது உழைப்பால் சேர்த்து வைத்த பணத்தை பயன்படுத்தி நல்ல பயணத்தை மேற்க்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார் ஹட்சன்.வந்தவுடனே இரு அமெரிக்கர்களுடனான சந்திப்பு.அதன் பின்னர் ஹோட்டலை அடைகிறார்.அங்கு சில முகங்கள் புன்னைகையுடனே அறிமுகமாக, மாலையில் கேஃபேவுக்கு செல்கிறார்.மொழித் தெரியாத, முன்னும் பின்னும் பழக்கமில்லாத இடத்தில் தவிக்கிறார்.அங்கணம், ஓர் ஆடவன் தன்னையே பார்ப்பதை கவனிக்கிறார்.ஹட்சனுக்குள் ஏதோ தோன்றவே அங்கிருந்து நழுவுகிறார்.

மறுநாள், கடைகளின் வழியே செல்லவே...சிவப்பு கண்ணாடி கிண்ணம் ஒன்று கடையொன்றில் வைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறார்..பிடித்துவிடவே, தனக்கு வந்த இத்தாலிய மொழியில் ஏதோ பேசிய வண்ணமே கடையின் முதலாளியை கண்டுக்கொள்கிறார்.அவர்தான் ஹட்சன் முந்தினம் கேஃபேவில் பார்த்த நபர்.இங்கு தொடங்கும் இவர்களைது அறிமுகம் வளர்கிறது...சந்திக்கிறார்கள்..பேசுகிறார்கள்..

இப்படியே இவர்களது உறவு எங்கு கொண்டு போய் விடுகிறது? காதலா ? நட்பா ? விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் ஹட்சனுக்கு கிடைத்த அனுபவங்கள் யாவை ? என்பதுப்போலான கேள்விகளுக்கு விடைகளை அறிய திரைப்படம் பார்ப்பதே சிறந்தது

படத்தின் பிரதான பெண் பாத்திரமான ஜேன் ஹட்சனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை இது.படம் முழுவதும் அவரது ராஞ்சியமே ஓங்கி நிற்கிறது.மொழி, இடம் தெரியாத ஊருக்கு வந்து திரு திருவென முழிப்பாதகட்டும் யாருடனும் பெரியளவில் முகம் கொடுத்து பேசாமல் விலகிச்செல்ல முற்ப்படுவதாகட்டும் வயதில் மத்திமத்தில் நிற்கும் ஜேன் ஹட்சன் பாத்திரத்தோடு முகம், உடல்வாகு, நடிப்பு ஆகிய அம்சங்களோடு ஒன்றென இணைகிறார் நடிகை கேத்தரின் ஹெப்பன்.கூடவே ஆஸ்கர் பரிந்துரையும் பெற்றுவிட்டார்.படத்தில் இவருக்கும் ஹிரோவுக்கும் இடையிலான சந்திப்பும், உரையாடல்களும் துடிப்பு : அதையும் தாண்டி எனக்கென்னவோ ஹீரோயினுக்கும் கைய்டாக வரும் அந்த குட்டி பையனுக்குமான உறவை வெளிப்படுத்திய விதம் அருமை..அழகு.அந்த பையன் நன்கு நடிக்கிறார் ஆனால் யாரென்றுதான் தெரியவில்லை.

@@==============================================@@@=========================================================@@@
Katharine Hepburn (1907-2003)

ஹாலிவுட் மட்டுமின்றி, உலகளவில் பல சினிமா இதயங்களை தனது அழகாலும் நடிப்பாலும் கவர்ந்திழுத்த அற்புதமான நடிகைகளில் முதன்மையானவர் இவர்.நான்கு முறைகள் ஆஸ்கர் விருதுகளை தன் கைகளில் ஏந்திச்சென்ற சென்ற நூற்றாண்டின் இணையற்ற சினிமா பெண் கலைஞர்களில் ஒருவராக ஹெப்ப்ர்னை தாராளமாக சொல்லலாம்.1907 ஆம் வருடம் மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவர், தனது முதல் சினிமா அறிமுகமாக A Bill of Divorcement (1932)-ல் தோன்றினார்.அடுத்த வருடமே தனது மூன்றாவது படமான Morning Glory (1933) -ல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கரையும் பெற்றார்.இங்கு தொடங்கிய இவரது கலைப்படைப்பு, தொடர்ந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலும் நிலைத்தது என்பது சாதனையே அன்றி என் சொல்ல முடியும்.தொடர்ந்து The Philadelphia Story (1940), The African Queen (1951), Suddenly, Last Summer (1959), Guess Who's Coming to Dinner (1967), The Lion in Winter (1968) போன்ற படங்களில் தனது நடிப்பு முத்திரையை பதித்து 12 ஆஸ்கர் பரிந்துரைகளில் தனது நான்காவது விருதை On Golden Pond (1981) என்ற படத்துக்காக வென்றார்.இதுவரை அதிகமான ஆஸ்கர்களை வென்ற பெருமை இவரையேச் சாரும்.இவ்வளவு திறமைமிக்க நடிகை, தனது 96 வயதில் இயற்கை எய்தினார்.இன்றும் இவர் நடிப்புக்கு முன்னோடிகளில் ஒருவர் எனில் மிகையாகாது.      
@@============================================@@@===================================================@@@

முதலிலேயே குறிப்பிட்டு இருந்தேன், டேவிட் லீன் திரைப்படங்களின் ஒளிப்பதிவு என்பது தனித்து நிற்குமென்று.அதற்கு எந்த வித இறக்கமும் இல்லாமல், அழகிய வெனிஸ் நகரினை வளைத்து வளைத்து காட்டிருக்கிறார் இயக்குனர்.ஒன்றரை மணி நேரமும் கடப்பதே தெரியாது காட்சிகளுடனே கட்டிப்போட ஒளிப்பதிவு சிறப்பான பணியை செய்துள்ளது.கவர்ச்சிகரமான கோணங்களில் கண்களை கவரும் வண்ணங்களில் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது.படம் வந்து 60 ஆண்டுகளை தொடும் நிலையில், இன்றும் ஏன் என்றேன்றும் இப்படம் இளமையாக விளங்குவதற்கு கேமராவே மிகப்பெரிய பலம்.

இறுதியாக, ஓர் அழகான காதல் சித்திரம் இந்த சம்மர்டைம். சில்லென்ற மாலைநேரத்தில் ஒரு கப் டீ அல்லது காப்பியை அருந்திக்கொண்டே பார்ப்பதற்கு ஏகுவான படைப்புமேற்க்கொண்டு படத்தில் உள்ள சில சிறப்பம்சங்களை குறிப்பிடாது இத்தோடு விடைப்பெறுகிறேன்...காணத் தவறாதீர்கள்..   

IMDB : 7.5 / 10
MY RATING : 7.5 / 10
@@=============================@@============================@@@
சம்மர்டைம் (1955) - குளிர்சாதனம் போட்டு ஜாலியாக பாருங்க.
@@=============================@@============================@@@
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge