Follow by Email

Tuesday, 29 May 2012

Carnage (2011) : பொலான்ஸ்கி எடுத்த டிராமா


என்றைக்குமே சுமார் ஓராண்டுக்குள் வெளிவந்த படங்களை பார்த்து ரசித்து எழுதியதாக ஞாபகம் இல்லை.பல நல்ல புதிய படங்களை தேர்ந்தெடுத்து ஜேக்கி சார், கருந்தேள் சார், சக நண்பர்களான அருண், ராஜ், ஹாலிவுட் ரசிகன், JZ, udanppirappe போன்றவர்கள் எழுதி கலக்கிவிடுகிறார்கள்இவர்கள் எழுதின பிறகு, நான் என்னத்த எழுதி கிழிக்க முடியும்.தல இருக்கும் போது வால் ஆடலாமா.சொல்லுங்க ? அதனால்தான் போதும்பா சாமின்னு, பழைய படங்களை பார்த்து எழுதிறது கூடிவிட்டது.(நெறைய பேர் பார்க்காத படம்னா கண்ணாப்பின்னானு பண்ணலாம் பாருங்க)உண்மையில், புதுப்படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது.

 ஆனால் இந்த வருட ஆஸ்கருக்கு பிறகு, சென்ற வருடம் வெளிவந்த நல்ல படங்களை பார்க்க வேண்டும் என்ற அவா வந்துவிட்டது.அந்த வரிசையில் பார்த்த ஒன்றுதான் கார்னாஜ்.

பிரபல போலாந்து இயக்குனரான ரோமன் போலான்ஸ்கி-யின் அறிமுகம் சைனாடவுன் பார்த்தப் போது கிட்டியது.தெ பியானிஸ் திரைப்படம் இவரை எனது அபிமான இயக்குனர்களில் ஒன்றாக்கியது. பல சர்ச்சை, பிரச்சனைகளில் இருந்தும் கூட தொடர்ந்து அயராது நல் படைப்புகளை வழங்குவதற்கு உழைக்கும் சிறந்த திரைப்படைப்பாளர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், வித்தியாசமாக அவர் உருவாக்கிய இன்னொரு அனுபவம்தான் கார்னாஜ்.யாஸ்மினா யாசா என்பவரது குறிப்பிடத்தக்க மேடை நாடகமான கோட் ஒஃப் கர்னஜ் - யை காமெடி டிராமாவாக திரைவடிவம் கொடுத்த படக்குழுவினரை எவ்வளவு பாராட்டியும் தகும்.

ஆஸ்கர் வென்றவர்களான ஜோடி ஃபொஸ்டெர் மற்றும் கேட் வின்ஸ்லெட்டை பிடிக்காத ஹாலிவுட் ரசிகர்கள் குறைவு.திரைக்கு திரை நல்ல நடிப்பை வழங்க நினைப்பவர்கள்.இவர்கள் இருவருக்கு இன்னும் ஒரு தீனியாக இப்படத்தை கூறலாம்.கூடவே கோல்டன் குளோப்புக்கு பரிந்துரைகளும் பெற்றுருக்கின்றனர். இவர்களுக்கு பக்கப்பலமாக Christoph Waltz, John C. Reilly ஆகிய ஆண் நடிகர்கள் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர்.

லோக்கல் பார்க்கில் நிகழும் சண்டையில் சக்கார்த்தி என்ற சிறுவன் பேட் ஸ்டிக்கால் சக மாணவன் ஈதனை அடித்து பற்க்களை நொறுக்குவதோடு படம் துவங்குகிறது...பிறகு கதையென்ன என்று கேட்க்கிறீர்களா ?? அந்த சம்பவத்தின் காரணமாக இருத்தரப்பு பெற்றோரும் ஈதனின் அப்பார்ட்மெண்டில் கூடுகின்றனர்... அங்கு இவர்களுக்குள் நிகழும் உரையாடல்களே மொத்தப்படமும்..
அட..அப்படியா !!! அட ஆமாங்க.பேசுறதுல என்ன பெரிய ஆச்சரியம் ? ஆனால் அதை படமாக பார்க்கிறதில் புது அனுபவம்தான் இல்ல ?

ஈதனின் பெற்றோர்களாக வரும் ஜோடி ஃபோஸ்டர், மைக்கல் லொங்ஸ்டிரீட் மற்றும் சக்கார்த்தியின் தாய் தந்தையராக வரும் வின்ஸ்லெட், கிரிஸ்ட்டப் வால்ட்ஸ்.. இதுப் போன்ற சூழல்க்கதைக்கு சிறப்பான தேர்வு.கனிவு, கோபம், கருணை, படப்படப்பு என்று அத்தனை முகத்திலும் தெளிவான நடிப்பம்சங்கள் நாடகம் ஆடுகின்றன. உரையாடல்களில் உள்ள குரல் வெளிப்பாடுகளும், பாவனைகளும் கட்டாயம் பலரையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.


அது முக்கியமாக ஃப்ரூட் கொப்லர் என்னும் ஒன்றை சாப்பிட்டுவிட்டு வின்ஸ்லெட் எடுக்கும் உவா..உவா இருக்கே..!! அதை யாராயிருந்தாலும் கட்டாயம் ரசிப்பர்.அதோடு அவரோட ஹஸ்பண்டா வருற வால்ட்ஸ் - Inglorious Basterds யாரால் மறக்க முடியும்.இதில் கைப்பேசி பிரியரா வந்து பிறகு, சுற்றி இருக்கிறவங்களை (என்னையும் சேர்த்துதான்) வெறி ஏத்தும் போது..நகைச்சுவை வெடி. அதே வரிசையில் இன்னும் பல குறிப்பிடத்தக்க சுவாரஸ்யங்கள்..இருத்தரப்பு தம்பதிகளும் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொள்வதும், வாந்தி எடுத்த இடம், புத்தகம் முதலானவற்றில் வாசனை திரவியத்தை தெளிப்பதும், எல்லாம் முடிந்து இறுதியில் பைத்தியம் பிடித்ததுப்போல சிரித்து நடந்துக் கொள்வதும் என பல..என் சொல்ல..திரையில் நீங்கள் அதிகம் உணரலாம்.

ஒரு கட்டத்தில், இந்த படத்தை பொலான்ஸ்கி-தான் எடுத்தாரா என நெஞ்சம் தடுமாற வைத்துவிட்டது.தெ பியானிஸ்டில் மனதை உறுத்தியவர், சைனாடவுனில் மூக்கை கிழித்தவர் இதில் தனது மென்மையான இயக்கத்தால் நல்ல பொழுது போக்கு படமாக கர்னஜை நடிகர்களின் பங்களிப்பின் ஊடே அருமையாக வழங்கியிருக்கிறார்.நல்ல விமர்சனங்கள் எடுத்த வேளையில், கிடைத்த 10 பரிந்துரைகளில் வெனிஷில் லிட்டில் கோல்டன் பேர், சிறந்த திரைக்கதை : கோயா விருதுகள் உட்பட 4 விருதுகளை வென்றிருக்கிறது.

ஹாலிவுட்டில் இப்போதெல்லாம், ஆவோனா பிரமாண்டம், இல்லனா ஆக்சன், ஹாரர்கள் என்று சொன்ன விஷயங்களையே போலியாக பயன்ப்படுத்துவது என்பது அதிகரித்துக்கொண்டு வருகிறது. வசனங்களை கூட்டி, ஒரே சூழலை காட்சியாக உருவாக்கி வெளிப்புற அழகியலை  குறைக்கொண்டு ஏறக்குறைய சில செட்டுக்களில் படப்பிடிப்புகள் என்பது குதிரைக்கொம்பாக போய்க்கொண்டு வருகிறது.ஒரு 12 ஆங்க்ரி மென் (நல்லா படிங்க இது ஆங்க்ரி பேர்ட்ஸ் இல்ல), தெ ரோப், லைஃப் போட் போன்ற படங்கள் இனி அமெரிக்காவில் சாத்தியமில்லாத ஒன்றாகுமோ என்ற அறிக்குறையையும் உணர முடிகிறது.

ஏதோ போலாந்தில் பிறந்து : ஆங்கிலம் கற்றுக்கொண்டு : அமெரிக்கா உட்பட சில நாடுகளில் சர்ச்சைகளுக்கும் உண்டாகி இன்னும் சினிமாவை உயரிய கோணத்தில் பார்க்கும் ரோமன் போலன்ஸ்கி என்ற படைப்பாளியின் சிந்தனையில் உதித்த, அமெரிக்கா அற்ற ஆங்கில படமாக கர்னஜ், மேற்ச்சொன்ன அந்த குறையை நிறைவுப்படுத்த முயற்சித்திருப்பது குறிப்பிடதக்கது.

சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடம் -  பெரிய இயக்குனர், நடிகர்கள் என்று எண்ணத்தில் அது, இது இருக்குமோ என்ற வேற எந்த எதிர்ப்பார்ப்புகளோடு ரசிகர் போனாலும் வெறும் வசனங்கள், நடிப்பு இவை இரண்டைத்தவிர வேறெதுவும் கிடையாது என்பதற்கு நான் சாட்சி..ஆனால், அத்தனையும் சுவாரஸ்யமானவை..யாராவது இருவர் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள்.. ஒரு முக்கியமான விஷயத்தை பேச போகிறீர்கள்.அது தொடங்கவே, ஏதோ காரணமாக வெறுக்கிறீர்கள்வாய்ச்சண்டை ஏற்ப்படுகிறது..வெளியே போ என்று கூற முடியாமல்.. நீங்களும் விலக முடியாமல்..மப்பி மழுப்பும் உள்ளுக்குள் குழம்பும் அந்த நொடிகள், உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அதுதான் கர்னஜ். 

எப்படியாயினும், ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ், ஹாரர் போன்ற ஹாலிவுட்டின் வழக்கமான வகைகளை கண்ணார கண்டு போரடித்தவர்களுக்கு ஓர் அருமையான வித்தியாசமான படம் வெயிட்டிங்க்..உடனே சென்று டவுன்லோட் அல்லது டிவிடி வாங்கி சப்டைட்டிலுடன் பாருங்கள்.

IMDB : 7.3 / 10
MY RATING : 7.5 / 10 : A Very Unusual Conversational Drama 


@@====================================@@@=================================@@
கர்னஜ் -  அன்றாட வாழ்க்கையின் நாடகம்..நம்பினால் சினிமா..
@====================================@@@==================================@@
              
உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 8 May 2012

Mysterious Island (1961) : மர்மத்தீவில் மாட்டித்தவிக்கும் மனிதர்கள்

Film : Mysterious Island  Year : 1961
Country : United States       Rating : PG
Director : Cy Endfield
Writers : Jules Verne (Novel), Screenplay : John Prebble, Daniel B. Ullman, Crane Wilbur
Stars : Michael Craig, Joan Greenwood and Michael Callan

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில ராட்சத சண்டை காட்சிகள், பெண் கவர்ச்சி உடைகள் என இருப்பதால் 10 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்ப்பது நலம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாகச திரைப்படங்களின் மீதான எனது தாகம் சின்ன வயதில் தொடங்கியது.புதையல், தனித்துவிடப்பட்ட மர்ம தீவுகள், வினோதமாக மிருகங்கள், அங்கிருந்து தப்பிக்க திட்டங்கள் போடும் மனிதர்கள் என பலத்தரப்பட்ட அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை, இயக்குனர் யார், நடிகர்கள் யாவர் என்று எதுவுமே தெரியாது பார்த்த அனுபவங்கள் ஏராளம்அத்தனையும் சுவாரஸ்யமானவை.இன்றளவும் மனதோரம் மகிழ்ச்சியை தருபவை.அதனால்தான் என்னவோ தெரியவில்லை, நாவல்கள், சிறுக்கதைகள் என்று வாசிக்கும் சமச்சாரங்களும் சாகசங்கள் அதிகம் உள்ளவையாகவே மாறிப்போனது. 

பிரபல எழுத்தாளர் டேனியல் டெஃபோவ் அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த ரோபின்சன் குருசோவ் நாவலை பற்றி ஏற்கனவே காஸ்ட் எவே திரைப்பார்வையில் சொல்லியிருந்தேன்.இதுவரை படித்த புதினங்களில் மனதுக்கு நெருக்கமான ஒன்று.அதற்கு பிரதான காரணமும் சாகசங்கள்தான்அந்த கதை கொடுத்த தாக்கத்தில் இணையத்தில் தேடிய போது, மிஸ்டிரி ஐலண்ட் என்னும் Jules Verne என்பவர் எழுதிய நாவலும் அதனது தழுவலில் அதே தலைப்பில் வந்த ஆங்கில திரைப்படத்தை அறிய நேரிட்டது.கதைச்சுருக்கம் கொடுத்த அதே ஆவலோடு உடனே தரவிறக்கம் செய்து பார்த்த போதுதான் மனம் நிம்மதி அடைந்தது.

==========================================================================
கிளர்ந்தெளுகின்ற கடல் கொந்தளிப்பை காட்டிப்படியே கிரடிட் கார்டு ஓட, தீவிர இசையோடே அழைத்துச் செல்கிறது திரைப்படம்.

 கதை நகரும் ஆண்டு 1885.அது அமெரிக்க நாட்டு சிறைச்சாலை, சுற்றியும் புகை, வெடிகுண்டுகளின் சத்தங்கள் நிறைந்த புயலில் போர் நிகழ்கிறது.முன்னமே போட்டு வைத்த திட்டத்தோடு, போரில் கைது செய்யப்பட்ட ராணுவர்கள் சிலர் தப்பிக்க ஆயுத்தமாகின்றனர்.கேட்ப்பார் அற்று கிடக்கும் பெரிய பலூனில் தப்பித்திட வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.சுமார் நான்கு பேர்கள் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்குகிறார் சைரஸ் ஹார்டிங்..காவலர்களுடனும் புயலுக்கு இடையிலான வலுவான போராட்டத்துக்கு பிறகு, வெற்றிக்கரமாக தப்பிக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் பெரியளவில் அறிமுகமில்லாத அந்த ஐவரும் பலூனில் ஏற்பட்ட கோளாராலும் பேய்ப் போன்ற புயலாலும், ஆள் நடமாட்டமே இல்லாத தனித்தீவில் தனித்து விடப்படுகின்றனர்.வரைப்படமும் இல்லை..எந்த வித யூகிப்பும் இல்லை..எங்கே இருக்கிறோம் என்று தெரியாது அலைகின்றனர்.உண்மையை சொல்ல வேண்டுமெனில் தீவுக்குள் அவர்கள் கொடூரமான ராட்சத அபாயங்களுக்குள் சிறை வைக்கப்படுகின்றனர்.ஆம்..பல கொடிய மிருகங்கள் வாழும் தீவது.பற்றாதக் குறைக்கு எரிமலைகள் வேறு.

உணவு, ஆயுதங்கள், போதுமான தேவைகள் என்று யாதும் அற்ற அந்த மர்மத்தீவில் அகப்பட்ட அந்த ஐவரின் நிலைமை என்ன ? அவர்கள் தப்பித்தனரா ?? அல்லது விலங்குகளுக்கு பலியானார்களா ? என்பதை திரையில் பார்த்து அறிந்துக்கொள்வதே சிறந்த வழி.
==================================================================================

ஹாலிவுட் திரையுலக ஸ்பெஷல்/விஸுவல் எஃபெக்ட்ஸ் வரலாற்றில் Ray Harryhausen என்றுமே தவிர்க்க முடியாதவர்.பல புகழ்பெற்ற சாகச, ஃபேண்டசி திரைப்படங்களுக்கு பக்கப்பலமாக இருந்து பல மாய ஜால வித்தைகளை புகுத்திய ஒரு மேதை.இன்றைய தேதியில் நாம் ரசித்துப்பார்த்து ஆஹா, ஓஹோ என்று சொல்லி வியப்படையும் அனிமேஷன், 3டி, கிராஃபிக்ஸ் காட்சிகளை அன்றே தனது திறமையால் நம்ப மறுக்கின்ற வகையில் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றிக்கண்டவர்.Jason and the Argonauts (1963), Clash of the Titans (1981) போன்ற படங்களே அதற்கு மிக சிறந்த சாட்சி.

  அக்கலைஞனின் கைத்தேர்ந்த விஸுவல் எஃபெக்ட்ஸ் ஆளுமைக்கு இன்னொரு உதாரணமாக மிஸ்டிரி ஐலண்ட் படத்தை குறிப்பிடலாம்.ஒட்டு மொத்தமாக ஒரு கும்பலயே விழுங்கிவுடும் உடல் அளவில் பழங்காலத்து பறவைகள், வண்டுக்கள், ஆளைக் கொல்லும் நண்டு என்று அதிசயங்களை விருந்தாக்கி பார்வையாளரை கட்டுக்குள் வைக்கிறார்.மேலும், தென் அமெரிக்காவில் வாழ்ந்து அழிந்ததாக கருதப்படும் Phorusrhacos என்ற இராட்சத பறவையை வடிவமைத்து திரைக்குள் கொண்டு வந்து மோதும் காட்சியில் ஆச்சரியபட வைக்கிறார்..அவ்வளவு பிரமாண்டம்.

 இப்படி படம் முழுவதும் சிறப்பம்சங்கள்.நெஞ்சை அள்ளும் வண்ணம் Wilkie Cooper - இன் ஒளிப்பதிவோடு ஒவ்வொன்றும் அழகாகவும் பிரமிப்பூட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.. அதற்கு இன்னும் ஒரு கூடுதல் வலுவாக நம் எல்லோருக்கும் அறிமுகமாக பெர்னார்ட் ஹெர்மனின் பின்னனி இசை.மனிதர் எப்படிதான் சஸ்பென்ஸ், ஆக்சன், மர்மம், ஃபேமிலி என்று இத்தனை வகை சினிமாக்களிலும் சிறப்பாக செய்கிறாரோ தெரியவில்லை.சரியா முதல் காட்சி தொடங்கியது முதல் வரும் அந்த படு வேகமான இசை, படத்தை மேற்க்கொண்டு பார்க்க வேண்டிய தீவிரத்தை வழங்கிவிடுகிறது.

ஸ்பெயின் நாட்டில் படம் பிடிக்கப்பட்ட இத்திரையில் Michael Craig, Joan Greenwood and Michael Callan ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்கிருப்பவர் Zulu (1964), Hell Drivers (1957), Zulu Dawn (1979) போன்ற படங்களை எடுத்த Cy Endfield (1914-1995) ஆவார்.நாவலின் அசலான கதையை வைத்துக்கொண்டு சில பெண் கதாபாத்திரங்கள், காட்சிகள் என சிலவற்றை கூடுதல் படுத்திட விறுவிறுப்பாக சுமார் ஒன்றைரை மணி நேரம் போவதை தெரியாது கொண்டு சென்ற இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் நன்றிகள் பல சொல்ல வேண்டும்

பொதுவாக ஹாலிவுட் சாகச, ஆக்சன் படங்களில் லோஜிக்கை பார்ப்பது பாறைக்குள் சிக்கித் தவிப்பதை போல.எவ்வளவுதான் சிந்தித்து பார்த்து ரசித்தாலும் அவர்கள் விரிக்கின்ற வலையில் போய் விழுவதென்பது அரிதான காரியம்.காரணம் அது இன்று தொடங்கியது அல்ல, எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வந்தவை.ஆரம்ப காலத்தில், நாவல்கள், சிறுக்கதைகள் என்றப்படியே தொடங்கிய இது, திரைப்படங்களில் தொற்றிவிட்டது..கற்பனைகளுக்கு எட்டாத கதைக்களங்களும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வகையில் காட்சியமைப்புகளும் என பலவற்றை காண்பித்து லாஜிக் ஓட்டைகள் எல்லாவற்றையுமே அடைத்துவிட முயற்சி செய்வார்கள்.அது பெரும்பாலான வயதினர்களும் ரசிக்கும் படி அமைந்துவிடுவதே அமெரிக்க சாகச, ஆக்சன் படங்களுக்கு மிக பெரிய பலம் என்று நினைக்கிறேன்.

 அந்த வரிசையில் மிஸ்டரி ஐலண்டும் அடங்கும்..ஏன், எப்படி என்ற பல கேள்விகளை மறந்துவிட்டு இந்த படத்தை பார்த்தோமானால், ஒரு அழகான பொழுது போக்கு அம்சமாக உருவாகிவிடும்.. குழந்தைகளோடு பாருங்கள்.குறைகள் பல இருப்பினும் ஜாலியாக பார்த்து நன்றாக ரசிக்கலாம்

IMDB : 6.8 / 10
MY RATING : 6.0 / 10
Mysterious Island : Fantasy Island 
====================================================================== 
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge