Follow by Email

Saturday, 22 October 2016

Arnold Schwarzenegger பார்வை 2

டாப்-டென் என்று சொல்லிட்டோமே என்று நினைத்து ஆர்னல்ட் நடித்த திரைப்படங்களை திரும்பவும் பார்க்காமல்..கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு RECALL செய்து பார்த்துவிட்டு எழுத ஆரம்பிக்கும் பதிவு..

ஆர்னல்டு படங்களை மீண்டும் பார்ப்பதும் நினைவில் மீட்டெடுப்பதும் சுகமாகவே இருக்கிறது..கொஞ்சம் பார்க்கலாம் வாங்க..

PREDATOR (1987)

ஓர் அடர்ந்த காடு--ஏழு கமாண்டோக்கள்--ஒரு ஏலியன்..இதுதான் ஒற்றை வரி அல்லது சூழ்நிலை என்று வைத்துக்கொள்வோம்.

உலகத்தில் உள்ள எல்லா இயக்குனர்களாலும் படமாக்கக்கூடிய சிம்பிள் கதை.ஒரு ஏலியன்..அதை சுற்றி மனிதர்கள் என்று கால காலமாக புளித்துப்போன கதையை இந்தா தோசை தரேன்..இட்லி தாரேன் என்று சொல்லி ஏமாற்றிய கதைகள் எல்லாம் ஹாலிவுட் மட்டுமல்ல உலகமெங்கும் நிகழ்ந்துள்ளது..இதே கதையை-படத்தை எடுக்கிறேன் அதாவது (சுடுகிறேன்) என்று சொல்லி தமிழில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் ரசிகர்களை கொலை செய்த சம்பவம் கூட நடந்திருக்கிறது.

கூ.த: நான் அதிகமாக பார்த்து ரசித்த படத்தை தமிழில் ரீமேக் என்ற பெயரில் பார்க்கப்போய் வெந்துப்போன கதை தனிக்கதை.அந்த படத்தின் பெயரை நீங்களே யூகித்துக் கொள்(ல்)ளு(லு)ங்கள்.  

ஏலியன் மீது அன்பும் பரிவும் ஏற்படுத்தியது ஈ.டி படமென்றால் அதற்கு நேர்மாறாக சிறிய வயதில் பயமுறுத்திய படம் ஒன்று உண்டு..அதுதான் பிரடேட்டர்..இந்த படம் பார்த்துவிட்டு தூங்க பயந்த, குளிக்கும் போது பயந்த காலம் எல்லாம் உண்டு..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...   

வெறும் 18 கோடி செலவில், ஜான் மெக்தியர்னன் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளிவந்து அமெரிக்காவின் எல்லா மூலைகளிலும் 100 கோடி வரை வசூல் புரிந்து அமோக வரவேற்ப்பை பெற்றது.

ஒரு RESCUE மிஷன்-க்காக காட்டுக்குள் செல்லும் ஏழு கமாண்டோக்கள்..பூமிக்கு வந்து மனித வேட்டை ஆடும் ஏலியனிடன் சிக்கித்தவிக்கும் சாதாரண கதையை அற்புதமான திரைக்கதையால் நகர்த்திருப்பர்.

ஹெலிகப்டரில் ஒவ்வொருவராக இறங்க, சிகார் பிடித்தப்படியே அறிமுகமாகும் ஆர்னல்டின் "டட்ச்" என்ற கதாபாத்திரம் படம் முழுவதும்  வெளிப்படுத்தும் முக பாவனைகள் தனி ஸ்டைல்...அதுவும் படத்தின் கடைசி அரை மணி நேரங்களை தன் தோள்களில் சுமந்து சென்றிருப்பார்.தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோயிசத்தை காண்பது அரிது..

படம் பார்க்காத ஒருவர் இப்பொழுது பார்த்தாலும் ஏதோ புது படம் மாதிரி FRESH ஆக இருப்பதை உணரலாம்.நீங்கள் ஆர்னல்ட் ரசிகரோ இல்லையோ ஆக்சன் ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.ஹாரர் பிரியர்கள் மிஸ் பண்ணாதிங்க.இதன் தொடர்ச்சியாக சில பாகங்கள் வந்தாலும் ஒரிஜினல் படத்தின் மகத்தான வெற்றியை பெற முடியாமல் போனதுதான் இந்த படத்தின் சிறப்பு.

ERASER (1996)

தமிழில் வந்திருக்குற விஜய்காந்த், அர்ஜூன் படம் மாதிரி ஏதாவது ஆர்னல்டு பண்ணிருக்காரா?? என்று கேட்டால் கூட இல்லை நினைச்சா கூட கட்டாயமா பார்க்க வேண்டிய படம் இரேசர்..நம்ம தமிழ் ஹீரோக்கள் நாட்டுக்கு அப்புறம் அதிகமா காப்பத்துன விஷயம் இருக்குனா அது கண்டிப்பா ஹீரோயினா-தான் இருக்கும்..அந்த மாதிரி ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றும் கதையிது..

உலகமெங்கும் குற்றவாளி மற்றும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்புகாக இருக்கும் ஒரு போலிஸ் பிரிவுக்கு Witness Protection System என்று பெயர்.இவர்கள் வேலையே சாட்சி சொன்னவர்களின் சொந்த அடையாளத்தை சிறிது காலம் அழித்துவிட்டு புது அடையாளத்தோடு பாதுகாப்பு வழங்குவதுதான்..இப்போது கண்டிப்பாக ERASER என்ற டைட்டிலுக்கான காரணம் புரிந்திருக்கும்..அந்த பிரிவின் முக்கிய போலிஸாக நம்ம ஆர்னல்டு..ஜான் கிரூகர் என்ற கேரக்டரில்..  

அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் செய்து கொடுக்கும் கம்பெனியான "சைரஸ்"..அதிநவீன ரக ஆயுதங்களை வெளிநாட்டு சதி கும்பலுக்கு விற்பதாக போலிஸ் சந்தேகப்பட, கம்பெனிக்குள் பணிப்புரியும் லீ குல்லென் என்கிற பெண்னை வேவு பார்க்க அனுப்புகிறது..அதன் தொடர்பாக சில உண்மைகள் வெளிவர, போலிஸுக்குள் இருக்கும் முக்கிய நபர்களே லீ-யை கொலை செய்ய முயற்சிக்க..கடைசிவரை எப்படி போராடி நம்ம ஆர்னால்ட் ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை..

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சுவாரஸ்யம் குறையாமல் 2 மணி நேரம் போவதே தெரியாமல் பார்க்கலாம்.ஆக்சன் காட்சிகளில் ஆர்னல்டின் வேகமும் படத்தின் பாதியில் வரும் விமான சண்டையும் ஹைலைட்..James Caan, Vanessa Williams போன்றவர்களின் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை தந்த படமிது.அதுவும் Pastorelli கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கவர்கிறார். ஆர்னல்டின் சிறந்த ஆக்சன் லிஸ்ட்டில் கட்டாயமாக இரேசர்-க்கு இடமுண்டு.  

COMMANDO (1985)

ஆர்னால்டை ஒரு முழுமையான ஆக்சன் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்த்திய வெற்றி படம் கமாண்டோ..படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் கும்பல், குப்பை லாரியில் வந்து ஒருத்தரை போட்டுத் தள்ளுகிறார்கள்..வரிசையாக மேலும் இருவர்..யாருய்யா இவனுங்க என்று நினைப்பதற்குள், அடுத்த காட்சி..ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான சிறந்த அறிமுக காட்சி..

பெரிய மரக்கட்டையை தோல்களில் தூக்கிக்கொண்டு வரும் பலமிக்க கைகளை சூம் பண்ணியவாரு தொடங்கும் டைட்டில் கார்டு படத்தின் மீதான ஒட்டு மொத்த மூடை கிளப்பிவிட்டிடும்..நம்ம ஆர்னல்டு முன்னால் DELTA FORCE பிரிவை சேந்தவர்.. அதாவது தீவிரவாதத்துக்கு எதிராக இயங்கும் ஒரு பிரிவு..இவர்களது பணியே தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட HOSTAGE-களை காப்பாற்றுவதுதான்.

இப்போது அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று தன் மகளுடன் வசித்து வரும் ஆர்னால்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மேலும் அவருடன் ஒரே யூனிட்டில் பணியாற்றிய மூன்று பேரும் கொல்லப்படடதாகவும் மேல்- அதிகாரி எச்சரித்துவிட்டு போகிறார்..இவர் இப்படி போக, கெட்டவர்கள் அப்படி வரவே பெரும் போராட்டத்தில் ஆர்னல்ட் மற்றும் மகளை கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.Val Verde (Fictional Country)  ஜனாதிபதியை கொலை செய்ய ஆர்னால்டை மிரட்டுகிறது. மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்க..மிச்ச மீதி கதையை நான் சொல்ல வேண்டியதில்லை.ஆர்னல்ட் தன் மகளை காப்பாற்ற போராடும் காட்சிகளை மிரட்டலான ஆக்சன் மூலம் உருவாக்கிருப்பார்கள்.பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்.

ரேம்போ, டை ஹார் வரிசையில் காமாண்டோ ஹாலிவுட் வரலாற்றில் மிக சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்றாக சொல்கிறார்கள்.EXORCIST படத்தின் பாதிப்பில் 100 ஹாரர் படங்களாவது எப்படி வந்திருக்குமோ அதே மாதிரி காமாண்டோ.பக்கா சண்டை படத்துக்கு உதாரணம்.இந்த படத்தின் பாதிப்பு நிறைய இந்திய சினிமாவிலும் பார்க்கலாம். கேட்டால் இன்ஸ்பிரஷன் என்று சொல்வார்கள்.சரி இந்த பிரச்சனை வேண்டாம்..

ஆர்னல்ட் நடிப்பில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று படங்களை இன்று பார்த்தோம்..இன்னும் சில படங்களை எழுதலாம் என்ற நினைப்பில் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்...

Monday, 17 October 2016

Oscar Kanavu..

இந்திய திரைத்துறைக்கு ஒரு அமீர்கான் போதுமா..முடிந்தால் நூறு..
திரை வாழ்வில் குறைந்தது ஒரு தடவை என்கிற வீதம் சற்றே இந்திய சினிமாவின் 100 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறைகளாவது...ஆஸ்கரு-க்கோ-கோல்டன் குளோப்பு-க்கோ சும்மா நாமினேஷன்ஸ் ஆவது கிடைத்திருக்கும்..
மூன்றாம் உலக நாடுகள் எல்லாம் உலக விருதுகளை அள்ளும்போது, இந்திய மொழிகள் பேசும் படங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏனோ ஏக்கத்தை தருகிறது..சினிமாவுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும்..மதம் சார்ந்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நடுவே மனம்சார்ந்த படங்கள் குறைந்துவிட்டது..எதார்த்தத்தை விட்டு நாம் எங்கோ விலகி வந்துவிட்டோம் போலும்..பல இயல்பான கதைகளை திரையில் சொல்வதற்கு பதிலாக மசாலாக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

நானும் படம் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு இந்திய மசாலாக்களை உறிஞ்செடுத்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் கொடூரமான விஷயம் இங்கு மலேசிய தமிழ் சினிமாவிலும் நடந்துக்கொண்டிருக்கிறது..நாடக்கதனம் கலக்காத எதார்த்த காட்சி ஒன்றைக்கூட முழுமையாக கண்டதாக ஞாபகம் இல்லை..எதற்காக இவர்கள் இந்திய படங்களை, முக்கியமாக தமிழ் சினிமாவை நோக்கி பயணிக்கிறார்கள் என்றும் தெரிந்தப்பாடில்லை..

ஆனால் சீன, மலாய் இனத்தவர்களால் எடுக்கபடும்  மலேசிய மற்றும் சிங்கப்பூர் திரைப்படங்கள் ஒரு சில கேன்ஸ் வரை போகிறது..உலக விருதுகளை நோக்கி பயணிக்கிறது..ஒரே நாடு-ஒரே சினிமா..இந்த பிரிவினைக்கு காரணம்??

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களாக-தொழில் நுட்ப கலைஞர்களாக அறியப்படும் பலர் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்..உலக சினிமாவின் அறிவு, அனுபவங்களை கொண்டவர்கள்..முதல் சில படங்களின் மூலம் "ஆஹா என்ன டைரக்டருல" என்று சொல்லுமளவுக்கு இருப்பவர்களில் பலருக்கு 3, 4 படங்களுக்கு பிறகு கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்ற நிலை வேறு..

தமிழ் சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.ஒன்று, மசாலா..இரண்டாவது. புது முயற்சி அல்லது வித்தியாசம்..இதில், சொந்தமாக அதுவும் வித்தியாசமாக எடுக்கிறேன் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை வேறு..ஏதாவது பிற திரைச்சார்ந்த கதை அல்லது காட்சிகளின் காப்பியாக அல்லது தொகுப்பாக இருக்குமோ என்ற பயம் கொஞ்சம் எட்டி பார்க்கிறது.. 
வித்தியாசம் என்றால் காப்பி..இல்லையேல் அதே அரைத்த மசாலா..இவர்களது 
இயலாமையை வெளிச்சொல்லாமல் இதுதான் சினிமா..இதுதான் ரசனை என்று சொல்லி சாமனியனிடம் கொண்டு சேர்க்கும் வித்தைக்கு பெயர் வியாபாரம்..நல்ல உயர்த்தர ரசிகர்களை உருவாக்கும் கடமை படைப்பாளிகளுக்கே உள்ளது என்றால் மறுக்க முடியுமா..

முழுப்படத்தை சுட்டுவிட்டு புது பெயரில் ரிலீஸ் செய்து இன்ஸ்பிரசன் என்று, பேருக்கு கூட கிரடிட் கார்டுகளில் அந்த குறிப்பிட்ட படத்தையோ கலைஞர்களின் பெயரையோ போடாத கொடுமை இங்கு நடக்கிறது..இது இங்கு மட்டுமா நடக்கிறது..? என்று கேட்கலாம்..எல்லா நாடுகளிலும் இருக்கிறது...அட் லீஸ்ட் நாம் மாறலாமே..ஒருத்தர் செய்கிறார் என்பதற்காக அதே தவறுகளை நாமும் செய்யலாம் என்பது ஞாயமாகுமா?

அது போகட்டும்..அப்படியே அந்த காப்பியை மக்களில் சிலர் கண்டுபிடித்து சொன்னால்..உடனே சிலாகித்து "அந்த நாட்டு மக்களுக்கு அந்த சினிமா மூலம் கிடைத்த உணர்வை அனுபவத்தை நான் என் நாட்டு மக்களுக்கு தருகிறேன்" என்று கூறுவார்கள்..அப்படி அது எங்களுக்கு கிடைத்துதான் ஆக வேண்டுமென்றால் ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கு சப்டைட்டில் போதுமே..அது இல்லாதவர்களுக்கு உங்கள் பணத்தில் தமிழில் டப் செது கொடுங்கள்.அது போதுமே.முழுப்படமாக எடுக்கும் பட்ஜெட்டை விட இதற்கு செய்யும் செலவு குறைவுதானே.அடுத்தவர் படைப்பை அனுமதி இல்லாமல் சுடும் பழக்கத்துக்கு வழக்கமாக சொல்லும் அதே நொண்டி சாக்குகள்..    

இன்ஸ்பிரேஷன் அல்லது தாக்கமில்லாமல் புது படைப்பை உருவாக்க முடியுமா..என்று சிலர் கேட்கலாம்..ஒத்துக்கொள்கிறேன்..எந்த படைப்பும் ஒரு படைப்பின் தாக்கமோ பாதிப்போ இல்லாமல் இருக்காது..ஒன்றின் உருவாக்கத்திற்கு இன்னொன்றின் "மூலம்"-தான் காரணமாக உதவியாக இருக்கும்..ஆனால், இங்கு நடப்பது!! கிரியேட்டராக இல்லாமல் போகட்டும் விடுங்கள்..அட் லீஸ், இன்னோவேட்டராக கூட இருக்க மாட்டேன் என்று சொல்லும் திரைக்கலைஞர்களை என்ன செய்வது..  

"சாமன்யனுக்கு நான் படமெடுக்கிறேன்..அவன் 2 மணி நேரம் விசில் அடித்து எஞ்சோய் பண்ண வேணாமா..புது முயற்சி என்ற பேருல நான் ஏன் அவங்களுக்கு புரியாம எடுக்கனும்..கொடுக்குற காசுக்கு 6 பாட்டு 4 சண்டனு இருந்தாதானே சூப்பரா இருக்குமுனு" பல காலமாக இப்படியே சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கும் கலைஞர்கள் நெறைய பேர் இருக்கிறார்கள்...நான் பாமர மக்களுக்கு படம் எடுக்கிறேன் என்று சொல்லுவார்கள்...ஈரானில் கட்டட தொழிலாளிக்கூட பாமரன்-தான்..துணி விற்பவன் கூட பாமரன்-தான். அவனுக்கு ஒரு கலர் ஒஃப் பேரடைஸ், சில்ரன் ஒஃப் ஹெவென்...போன்ற அனுபவங்கள் கிடைக்கும் போது என்னை போன்ற இந்திய பாமரனின் நிலை ஏன் இப்படி..?

அதுக்காக நல்ல படங்களே இல்லையா...இருக்கிறது.சத்யஜித் ரே போன்ற மேதைகள் தந்த இந்திய சினிமாவை பார்த்து இப்படி சொன்னால்.. மிக பெரிய பாவம்.ஆனால் ஒரு சத்யஜித் ரே போதுமா..
ஜப்பான், அகிரா குரோசாவை மட்டுமே காட்டி காலம் தள்ளிக்கொண்டிருக்கவில்லை... Nagisa Ôshima, Yasujirô Ozu தொடங்கி Takeshi Kitano வரை உலக புகழோடு தனக்குள் வைத்திருக்கும் சினிமாதான் ஜப்பான்..இன்னும் பலரை உதாரணம் காட்டலாம்..

கடந்த பத்தாண்டுகளில் சில உயர்த்தர தமிழ் படங்கள் ஒரு படி முன்னுக்கு சென்றால்..கமர்ஷியல் போர்வையில் வெளிவரும் பல "மொக்கை" படங்கள் அதன் அங்கீகாரத்தை தடுக்கின்றன..ஒரு நல்ல படம் அடையும் வெற்றியை தொடர்ந்து மேற்கொண்டு முயற்சித்து அதன் வழியில் பல படங்கள் எடுக்க வேண்டாமா??அதனை வெற்றிப்பெற செய்யும் ரசிகர்களின் ரசனையை வரவேற்காமல், "பழைய சோறையே" புதுத் தட்டில் போட்டுத்தர துடிக்கும் நபர்களை என்னவென்று சொல்வது..காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற சூழ்நிலையில் இது போன்றவர்களின் சில தவறுகள்..நம்மை உலக அரங்கில தலை நிமிர செய்ய முடியாமல் இருக்கிறது..
   
உலக சினிமா அறிமுகமான நேரத்தில் கேன்ஸ் வரை சென்ற மை மேஜிக் (2008) என்ற சிங்கப்பூர் படத்தின் அறிமுகம் கிடைத்தது..சீன இயக்குனர் எரிக் கூ எடுத்த தமிழ் படம்..கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது..ஒரு சீனர் எடுத்த தமிழ் படமா..தமிழன பத்தி தமிழன் எடுத்தாலே நல்லாருக்க மாட்டேங்குது..இதுல இது வேறயா என்ற அலட்சியத்தில் தான் படம் பார்த்தேன்..அநேகமாக கேன்ஸ் விழாவில் (பால்மர் டி ஓர்) விருதுக்கு போட்டியிட்ட முதல் தமிழ் படமது.வெற்றி பெறவில்லை-தான்.இருந்துவிட்டு போகட்டும்.என்றாலும் அந்த ஆண்டின் சிறந்த படமாக ப்ரான்ஸ் நாட்டு சஞ்சிகையே வெளியிட்டது..அதுவும் சீனர் எடுத்த சிங்கப்பூர் தயாரிப்பு..எத்தனை பேருக்கு இந்த படம் தெரியும் என்று தெரியவில்லை..கிடைத்தால் பாருங்கள்..தமிழில் சமீபத்தில் நீங்கள் வியந்து பார்த்த, சிறந்ததாக கருதிய சில தமிழ் நாட்டு படங்களுக்கு கொஞ்சமும் சலைத்ததில்லை..ஆக சிறந்த எதார்த்தமான தமிழ் மொழி படங்களில் டாப்-லிஸ்ட்டில் வைப்பீர்கள்..

ஒரு சீனரால் சாத்தியமானது ஏன் தமிழரால் முடியவில்லை..என்ற சிந்தனைக்கு வருவீர்கள்..சினிமா, மொழி-இனம்-மதம் போன்ற விஷயங்களை தாண்டியது என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம்..அதே கேன்ஸில் சென்ற ஆண்டு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு-தமிழ் படமான தீபன் சமீபத்தில் பார்க்க கிடைத்தது..தமிழர்களை பற்றிய படத்தை, தமிழ் மொழி சினிமாவை வேற்று மொழிக்காரர்கள்-தான் வாழ வைக்க வேண்டிய சூழ்நிலை..ஆஸ்கரை குறை சொல்பவர்கள் சொல்லட்டும்..அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றே நம்புவோம்...சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை கேன்ஸ் பட விழாவுக்கு உண்டு..என்ன மொழி பேசுகிறார்கள் கூட சொல்லும் அளவுக்கு பலத்தர "சினிமா"வை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது..அங்கு பேசப்படும் தமிழ் மொழியை உலகின் மிக சிறந்த சினிமா கலைஞர்கள் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போதே உச்சிக்குளிர்கிறது..வேற்று இனத்தவருடன் சினிமா பற்றி பேசும் போது "அது என் மொழிடா" என பெருமைக்கொள்ள முடிகிறது..அந்த பெருமை இன்னும் தொடர வேண்டாமா...??    
 கமர்ஷியல் படங்களை தொடக்கி வைத்த ஹாலிவுட் சினிமாவில் கூட எத்தனையோ நல்ல தரமான படங்கள் வருகின்றன..ஆனால் டப் செய்யும் போது கூட ஹாலிவுட் மசாலா-வையே பார்த்து பார்த்து மொழிமாற்றம் செய்பவர்களை நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை..

நான் பார்த்த வரையில் கடந்த சில வருடங்களில் என்னை வெகுவாக கவர்ந்த சில தமிழ் படங்கள் இவை:
Irudhi Suttru, Visaranai, Zero, Joker, Kuttrame Thandanai,36 Vayadhinile, Demonte Colony, Kaaka Muttai, Kuttram Kadithal, Thegidi, Vaayai Moodi Pesavum, Kathai Thiraikathai Vasanam Iyakkam, Pisasu, Kadhalum Kadanthu Pogum, Azhagu Kutti Chellam, Vennira Iravuggal (மலேசியா)


சில நாட்களுக்கு முன்பு குற்றமே தண்டனை படம் பார்த்து முடித்த போது தோன்றிய சில எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன். 2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக நினைக்கிறேன்..இது போன்ற படங்களை ரசிக்கும் ஒரு சிறிய பார்வையாளனாக எழுதிய கருத்துக்கள் இவை..யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் காயப்படுத்துவதற்காக எழுதியவை அல்ல..இதில் சில குறைகளும் இருக்கலாம்.ஏதாவது தவறு இருப்பின் மன்னிப்பு கேட்டு விடைப்பெறுகிறேன்..அடுத்த பார்வையில் சந்திக்கும் வரை நான்.

Saturday, 8 October 2016

A Single Girl (1995) French (18+)

கிரடிக் கார்டு முடிந்ததும், முதல் காட்சி..
காலை பொழுது-காப்பி ஷாப்..
காதலர்களின் சந்திப்பு..
10 நிமிடங்களுக்கு இடைவிடாது உரையாடல்கள்..
வெலெரி, தான் கர்ப்பமாக இருப்பதை சொல்கிறாள்..காதலனான ரெமி-குக்கோ வேலையில்லை..உண்மையில் பொறுப்பை துறந்தவன்..அம்மா அப்பாவுக்கு பயந்தவன்..அவளோ கருவை கலைக்க போவதில்லை என்ற முடிவோடு..என்ன செய்வது என்ற விவாதம் முற்றுப்பெறாத நிலையில்..
கடையை-விட்டு வெளியே நடக்க..
பின் தொடரும் கேமரா..
அடுத்த காட்சியில்,

ஹோட்டல்-புதிய வேலை..
புது சக பணியாளர்கள்..
அன்றைய காலையில் அவள் சந்திக்கும் நபர்களும், உருவாகும் சூழல்களும் தொடர்ந்து 50 நிமிட காட்சிகளாக..
அவளது ஒரு மணி நேர பணியை சுற்றி சுற்றி கேமரா..

மீண்டும்,
ஓய்வு நேரத்தில்..காப்பி ஷாப்..காதலர் சந்திப்பு
இங்கு விவாதம் உச்சம் தொடவே இருவரது பிரிவு..

பிறகு,
சில வருடங்கள் கழித்து-சிறுவர்கள் மைதானத்தில்
வெலரி வேலை முடிந்து வர தன் தாயரிடத்தில் அவளது பையன்..
=====================================================================
கருவில் நாம் உருவான நேரம்,,
விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பிய வினாடிகள்
காதலை உணர்ந்த தருணங்கள்,,
கல்யாணத்தில் முடிந்த நிமிடங்கள்,,

உங்கள் வாழ்க்கையிலும் ஒரு சில மணி நேரங்கள் படமாகலாம்..ஏ சிங்கில் கேர்ல் படத்தை போல..

நமக்கு தெரிந்தோ  தெரியாமலோ சில மணி நேரங்கள் நம் வாழ்க்கையின் மிக பெரிய அஸ்த்திவாரமாக  இருப்பதை மறுக்க முடியுமா?...நேரத்தின் மகத்துவத்தை அறிந்திராத நம்மில் பலரால் அந்த முக்கியமான நிமிடங்களை நினைவுகூர்வது என்பது முடியாமல் போகலாம்..ஆனால் அவைதான் வாழ்க்கை எனும் வாகனத்தின் எரிபொருள்..

ஃப்ரெஞ்சு சினிமாவின் தாக்கம் பல நாடுகளில் உள்ளது....சுற்றுலா என்று வந்தாலே அதுவும் ஐரோப்பா என்றாலே பேரிஸ்..நகரம் தான் நினைவுக்கு வரும்..அந்தளவுக்கு சினிமா என்பதை தாண்டி அவர்களது மொழி, கலாச்சாரம், கலை, உணவு போன்ற ரசனைகளை அறிந்துக்கொள்ள ஆசைப்படும் மக்கள் நிறைய இருக்கிறார்கள்..அவற்றை முழுமையாக  என்று சொல்லாவிட்டாலும் ஓரளவாவது இருந்த இடத்தில் இருந்து தெரிந்துக்கொள்ள உதவும் மிக பெரிய கருவி சினிமா.. சென்சார் போர்டே இல்லாத..ஃப்ரெஞ்சு சினிமா..

சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்தே அங்கு படங்கள் எடுக்கப்பட்டாலும்..உலகமெங்கும் 60 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் உருவான சினிமா புரட்சியில் ஏடுக்கப்பட்ட திரைப்படங்கள் இன்றுவரை கொண்டாடப்படுகின்றது..அவற்றை சினிமாவின் மறுமலர்ச்சி என்றாலும் மறுக்க முடியாது.

அந்த காலகட்டத்தில் பிரான்சில், புதிய தோற்றத்தில் உருவெடுத்த எதார்த்தமான படங்களை ரசிகர்கள் "ஃப்ரெஞ்சு சினிமாவின் புதிய அலைகள்" என்று அழைக்கின்றனர்..ஹாலிவுட்டின் கமர்ஷியலை விட்டு விலகி வித்தியாசமான அணுகு முறையில் சினிமா எடுக்க தொடங்கிய காலமது.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு சினிமா எப்படி எடுப்பதென்று ஐரோப்பியர்களும், பிற மொழி படைப்பாளிகளும் பாடம் எடுத்துக்கொண்டிருந்த நேரமது.

கடந்த ஐந்து ஆண்டுகளாகதான் உலக சினிமாவே அறிந்த நிலையில், François Truffaut, Luis Buñuel போன்ற இயக்குனர்கள் மற்றும் இவர்களது சில படங்கள்...இது தவிர ஃப்ரெஞ்ச் சினிமா பற்றிய எனது அறிவும், அனுபவமும் குறைவுதான்..தமிழில் சில விமர்சனங்களை படித்துவிட்டு டவுன்லோடு போட்ட திரைப்படங்களில் சமீபத்தில் நேரம் இருக்கவே பார்த்த படம் தான் ஏ சிங்கில் கேர்ல்..1995-ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட இதில் "வெலெரி"யாக Virginie Ledoyen-னும் ரெமி-யாக Benoît Magimel-லும் நடித்திருக்கின்றனர்..அதுவும் அந்த கதாநாயகி அழகோ அழகு..நடிப்பில் மட்டுமல்ல..

முதல் காட்சியிலேயே வெலெரி, காப்பி ஆர்டர் செய்யப் போகும்  நடையை காட்டி,
Aren't you overdoing it a bit?  Wiggling your butt like that! You don't see the way guys look at you! என்று
காதலன் பேசும் இந்த வசனங்களே அவனது குணத்தை நம்மிடம் சொல்லி விடுகிறது..என்னதான் கலாச்சாரம் நவீனமாக்கபட்டாலும் எல்லா நாட்டில் உள்ள காதலனும் இப்படிதான் போல என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை..இருவரது அடிப்படை குணாதிசயங்களை வெறும் வசனங்கள் ஊடே உணர்த்திய இயக்குனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

காலையில் தொடங்கி வெலெரியின் வாழ்க்கையில் மிக முக்கியமாக அமைந்த ஒன்றரை மணி நேரத்தை, அதன் எதார்த்தில் விட்டு படமாக்கிருப்பவர் Benoît Jacquot..சிறந்த படம் என்ற வரிசையில் இதை சேர்க்க முடியாவிட்டாலும்..வித்தியாசம் வித்தியாசம் என்று சொல்லி உயிரை உறிஞ்சும் சில கூட்டம் கட்டாயமாக பார்க்க வேண்டிய படமிது.இப்படியும் படம் சாத்தியமா என்ற வியப்பில் நான்..
மீண்டும் அடுத்த பார்வையோடு..சந்திக்கிறேன்.

பி.கு: 10 நொடிகளே வரும் ஒரு செக்ஸ் காட்சி..இரண்டு நிர்வாண காட்சிகள் படத்தில்.உஷாராக பார்க்கவும்.

Friday, 7 October 2016

Arnold Schwarzenegger ஒரு பார்வை 1

“I’M GOING TO BE THE NUMBER ONE BOX OFFICE STAR  IN ALL OF HOLLYWOOD.”
"பாவனையே இல்ல, கட்டைப் போல நடிக்கிறான்" என்று சொல்லும் அளவுக்கு இறுக்கமான முகம், ஆங்கிலம் சரிவர உச்சரிக்க, பேச தெரியாத நிலை, ஹீரோவாகக்கூட ஆக முடியாமல் பொம்மை போல திரையில் வந்துப்போன அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு நடிகன்,1976 ஆண்டு ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் கூறியபோது பத்திரிக்கையாளர் உட்பட படித்தவர்களும் அநேகமாக சிரித்திருக்கக்கூடும். குருட்டு நம்பிக்கை என்றிருப்பர், இன்னும் சில கூட்டமோ முன் விட்டு பின்னால் கேளி செய்திருக்கும். சரியாக 15 வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டு அதே அமெரிக்காவின் பல பிரபல தொலைக்காட்சிகள் "அந்த” நடிகனின் படமொன்றை"உலகத்திலேயே அதிகமாக வசூலான திரைப்படமாகவும்" உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகனாகவும்" புகழாரம் சூடிக்கொண்ருந்ததை பார்த்த பலரும் வாயடைத்து போடிருக்கக்கூடும்.அவனா இவரென்று...!!

 பல எல்லைகளை கடந்து போராட்டங்களுக்கு பிறகு உலகமெங்கும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வசீகரித்துக்கொண்ட அந்த பெயர் Arnold Schwarzenegger/அர்னால்ட் ஸ்வார்சுநேகர்..அநேகமாக அமெரிக்க வரலாற்றில் இந்தளவுக்கு உச்சரிக்க கடினமான பெயரில் சூப்பர் ஸ்டார் உருவாகிருக்க வாய்ப்பில்லை.பாடி பில்டராக தன்னுடைய வாழ்வை தொடங்கி உச்ச சினிமா நட்சத்திரமாக உயர்ந்தது..ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக அவருடைய தியாகமும் உழைப்பும் அசாதாரணமானது.சமீபத்தில் Arnold Schwarzenegger Biography என்ற டிவி சேனலின் நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க கிடைத்தது.அமெரிக்கா போக வேண்டும்:மிக பெரிய ஹாலிவுட் ஸ்டாராக ஆக வேண்டும்:பிறகு கென்னடி குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற இவரது சிறு வயது கனவுகள்...நனைவாக மாறுவதற்கு பின்னால் இருந்த மிக நீண்ட வரலாற்றை, வாழ்வில் கடந்து வந்த பாதையை காட்சி ஊடாக காண கிடைத்தது.ஆஸ்டிரியாவின் கிராமத்தில் பிறந்த ஒரு சாமான்யன் பிறகு மிக பெரிய ஸ்டாராக உருவெடுத்து ஒரு மகாணத்தின் கவர்னராக மாறிய வரலாறு மிகவும் நீண்ட, வலிகள் மிகுந்த கதை..

"வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு ஓர் அறிவுரை..முதலில் தோல்விகளை அடையுங்கள், கஷ்டங்களை அனுபவியுங்கள்.உங்களை ராஜாவாக உருவாக்க போவது ரோஜாக்கள் நிறைந்த பாதையில்லை.அவை கரடு முரடான காட்டு முட்கள் நிறைந்தவை..காடுகளை அழியுங்கள்..மலைகளை முட்டுங்கள்.பிறகுதான் வெற்றி கதவு..திறக்க உதவ போவது சாவியல்ல..உங்கள் சாதனை"வாழ்க்கையில் நான் தோல்விகள் சந்திக்கும்போது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் சொல்லிக்கொள்ளும் வாசகம் இது.

"THERE IS NO OVERNIGHT SUCCESS OR OVERNIGHT SUPERSTAR."

என்று சொல்வார்கள்..ரஜினி, ஜாக்கிச்சான், ஆர்னல்டு போன்ற நடிகர்களை பார்க்கும் போது அடிக்கடி இந்த வாசகம் நினைவுக்கு வரும்.ஒரே நாளில் உயரத்தை தொட்டவர் எவருமில்லை..அதேப்போல் ஒரே திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகரும் கிடையாது.அதற்கு பின்னால் இருக்கும் அவமானங்களும் உழைப்பும் எழுத்துக்களால் சித்தரிப்பது கடினம்..வந்தோம் நடிச்சோம்..காசு கிடைத்தது.செட்டல் ஆனோம்.இனி என்ன? என்று நினைப்பவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏராளம்.ஒரு வெற்றியை தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைக்க போராடும் குணமும் இவர்கள் செய்யும் புதிய முயற்சிகளும் தலைமுறை கடந்த ரசிகர்களை இவர்களுக்கு சொந்தமாக்குகிறது.

எனக்கு பிடித்த டாப் 10 நடிகர்ளில் எம்ஜிஆரும் ஒருவர்.நான் பிறப்பதற்கு முன்னமே மறைந்துவிட்ட நடிகரை எனக்கு பிடித்த நடிகராக என் நண்பர்களிடம் சொன்னால்..என்னடா பழைய நடிகர சொல்ற என்று கேட்பார்கள்.சிலரை காரணமே இல்லாமல் பிடிக்கும்.அந்த வரிசையில் எம்ஜிஆர்-சிவாஜி-இயக்குனர் ஸ்ரீதர், நாகேஸ் என பட்டியல் நீளும்.இவர்களது வாழ்க்கை பின்னனியை உற்றுப்பார்த்தால் கொஞ்சம் புரியும்.சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் மக்கள் மனதை ஆட்கொண்ட எவருமே எளிமையான வழியில் வாய்ப்பு கிடைத்து வந்தவர்களோ, சிம்பிளாக வெற்றிக் கண்டவர்களாகவோ இருக்கவே மாட்டார்கள்.கடின உழைப்பும், விடாமுயற்சியும், பெரிய கனவுகளும், முற்போக்கான சிந்தனைகளும், திறமைகளும் மக்களை தன் வசம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாவே இருப்பார்கள்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் போது ஒரு நடிகன், ஸ்டாராகலாம்.நல்ல கதைககள், உயர்ந்த இலட்சியங்கள் இணையும் பொழுது ஒரு சாதாரண ஸ்டார் கூட சூப்பர் ஸ்டாராக உருவாகலாம்.அந்த சக்தி அதற்கு உண்டு.டெர்மினெட்டெர் என்ற கதையும் உயர்ந்த கனவும்தான் இன்று ஜேம்ஸ் கேமரனை அவதார் வரை கொண்டு சென்றுள்ளது.சிறந்த கதைகளும் கனவுகளும்-தான் இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த சத்யரஜித் ரே என்ற ஒரு சாதாரண ஓவியனை, மிக சிறந்த இயக்குனராக உலக சினிமா உயர்ந்து பார்க்கிறது.   
ஹெர்க்குலஸ் இன் நியூ யோர்க் படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்திருந்தாலும், முதல் வெற்றியை அடைய ஆர்னல்டு, சுமார் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிருந்தது.கானன் தி பார்பரியன் ரசிகர்களை கவர்ந்திட, டெர்மினெட்டர் மக்கள் மனதில் ஆர்னல்டை இடம் பெறச்செய்தது.தொடர்ந்து வந்த கமாண்டவும், பிரேடேட்டரும் சாதாரண நடிகனாக இருந்தவரை ஸ்டாராக மாற்றியது.

40 வயது ஆகிவிட்டது..வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு என்பவர்கள் இருக்கும் உலகில், LIFE BEGIN AT 40 என்பதற்க்கு ஆதாரமாய் ஆர்னல்டின் அனைத்து வெற்றிகளும் 40 வயதை கடந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது...ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்டதோடு நில்லாது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தின் கவர்னராக வெற்றிக்கண்டதை எண்ணும்போது அதிசயக்கவைக்கிறது.          
                                             
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு".. 
"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்" என்ற பாடல்களும் பழமொழிகளும்தான் ஞாபகம் வருகிறது        

ஹாலிவுட் சினிமாவின் எனது முதல் அறிமுகம் ஆர்னல்டும் அவரது திரைப்படங்களும்தான்..அவரது படங்கள் மீதான பைத்தியம் தீர்ந்தப்பாடில்லை..ஏறக்குறைய எல்லா படங்களும் பார்த்துவிட்ட நிலையில் எனக்கு பிடித்த டாப்-டென் ஆர்னல்டு திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் சமீபத்தில் உதித்தது..அதற்கான முன்னோட்டமாக இந்த பதிவு..மீண்டும் சந்திக்கலாம் "பார்வையோடு"..    


Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge