Follow by Email

Arnold Schwarzenegger

“I’M GOING TO BE THE NUMBER ONE BOX OFFICE STAR  IN ALL OF HOLLYWOOD.”
"பாவனையே இல்ல, கட்டைப் போல நடிக்கிறான்" என்று சொல்லும் அளவுக்கு இறுக்கமான முகம், ஆங்கிலம் சரிவர உச்சரிக்க, பேச தெரியாத நிலை, ஹீரோவாகக்கூட ஆக முடியாமல் பொம்மை போல திரையில் வந்துப்போன அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு நடிகன்,1976 ஆண்டு ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் கூறியபோது பத்திரிக்கையாளர் உட்பட படித்தவர்களும் அநேகமாக சிரித்திருக்கக்கூடும். குருட்டு நம்பிக்கை என்றிருப்பர், இன்னும் சில கூட்டமோ முன் விட்டு பின்னால் கேளி செய்திருக்கும். சரியாக 15 வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டு அதே அமெரிக்காவின் பல பிரபல தொலைக்காட்சிகள் "அந்த” நடிகனின் படமொன்றை"உலகத்திலேயே அதிகமாக வசூலான திரைப்படமாகவும்" உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகனாகவும்" புகழாரம் சூடிக்கொண்ருந்ததை பார்த்த பலரும் வாயடைத்து போடிருக்கக்கூடும்.அவனா இவரென்று...!!

 பல எல்லைகளை கடந்து போராட்டங்களுக்கு பிறகு உலகமெங்கும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வசீகரித்துக்கொண்ட அந்த பெயர் Arnold Schwarzenegger/அர்னால்ட் ஸ்வார்சுநேகர்..அநேகமாக அமெரிக்க வரலாற்றில் இந்தளவுக்கு உச்சரிக்க கடினமான பெயரில் சூப்பர் ஸ்டார் உருவாகிருக்க வாய்ப்பில்லை.பாடி பில்டராக தன்னுடைய வாழ்வை தொடங்கி உச்ச சினிமா நட்சத்திரமாக உயர்ந்தது..ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக அவருடைய தியாகமும் உழைப்பும் அசாதாரணமானது.சமீபத்தில் Arnold Schwarzenegger Biography என்ற டிவி சேனலின் நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க கிடைத்தது.அமெரிக்கா போக வேண்டும்:மிக பெரிய ஹாலிவுட் ஸ்டாராக ஆக வேண்டும்:பிறகு கென்னடி குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற இவரது சிறு வயது கனவுகள்...நனைவாக மாறுவதற்கு பின்னால் இருந்த மிக நீண்ட வரலாற்றை, வாழ்வில் கடந்து வந்த பாதையை காட்சி ஊடாக காண கிடைத்தது.ஆஸ்டிரியாவின் கிராமத்தில் பிறந்த ஒரு சாமான்யன் பிறகு மிக பெரிய ஸ்டாராக உருவெடுத்து ஒரு மகாணத்தின் கவர்னராக மாறிய வரலாறு மிகவும் நீண்ட, வலிகள் மிகுந்த கதை..

"வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு ஓர் அறிவுரை..முதலில் தோல்விகளை அடையுங்கள், கஷ்டங்களை அனுபவியுங்கள்.உங்களை ராஜாவாக உருவாக்க போவது ரோஜாக்கள் நிறைந்த பாதையில்லை.அவை கரடு முரடான காட்டு முட்கள் நிறைந்தவை..காடுகளை அழியுங்கள்..மலைகளை முட்டுங்கள்.பிறகுதான் வெற்றி கதவு..திறக்க உதவ போவது சாவியல்ல..உங்கள் சாதனை"வாழ்க்கையில் நான் தோல்விகள் சந்திக்கும்போது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் சொல்லிக்கொள்ளும் வாசகம் இது.

"THERE IS NO OVERNIGHT SUCCESS OR OVERNIGHT SUPERSTAR."

என்று சொல்வார்கள்..ரஜினி, ஜாக்கிச்சான், ஆர்னல்டு போன்ற நடிகர்களை பார்க்கும் போது அடிக்கடி இந்த வாசகம் நினைவுக்கு வரும்.ஒரே நாளில் உயரத்தை தொட்டவர் எவருமில்லை..அதேப்போல் ஒரே திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகரும் கிடையாது.அதற்கு பின்னால் இருக்கும் அவமானங்களும் உழைப்பும் எழுத்துக்களால் சித்தரிப்பது கடினம்..வந்தோம் நடிச்சோம்..காசு கிடைத்தது.செட்டல் ஆனோம்.இனி என்ன? என்று நினைப்பவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏராளம்.ஒரு வெற்றியை தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைக்க போராடும் குணமும் இவர்கள் செய்யும் புதிய முயற்சிகளும் தலைமுறை கடந்த ரசிகர்களை இவர்களுக்கு சொந்தமாக்குகிறது.

எனக்கு பிடித்த டாப் 10 நடிகர்ளில் எம்ஜிஆரும் ஒருவர்.நான் பிறப்பதற்கு முன்னமே மறைந்துவிட்ட நடிகரை எனக்கு பிடித்த நடிகராக என் நண்பர்களிடம் சொன்னால்..என்னடா பழைய நடிகர சொல்ற என்று கேட்பார்கள்.சிலரை காரணமே இல்லாமல் பிடிக்கும்.அந்த வரிசையில் எம்ஜிஆர்-சிவாஜி-இயக்குனர் ஸ்ரீதர், நாகேஸ் என பட்டியல் நீளும்.இவர்களது வாழ்க்கை பின்னனியை உற்றுப்பார்த்தால் கொஞ்சம் புரியும்.சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் மக்கள் மனதை ஆட்கொண்ட எவருமே எளிமையான வழியில் வாய்ப்பு கிடைத்து வந்தவர்களோ, சிம்பிளாக வெற்றிக் கண்டவர்களாகவோ இருக்கவே மாட்டார்கள்.கடின உழைப்பும், விடாமுயற்சியும், பெரிய கனவுகளும், முற்போக்கான சிந்தனைகளும், திறமைகளும் மக்களை தன் வசம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாவே இருப்பார்கள்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் போது ஒரு நடிகன், ஸ்டாராகலாம்.நல்ல கதைககள், உயர்ந்த இலட்சியங்கள் இணையும் பொழுது ஒரு சாதாரண ஸ்டார் கூட சூப்பர் ஸ்டாராக உருவாகலாம்.அந்த சக்தி அதற்கு உண்டு.டெர்மினெட்டெர் என்ற கதையும் உயர்ந்த கனவும்தான் இன்று ஜேம்ஸ் கேமரனை அவதார் வரை கொண்டு சென்றுள்ளது.சிறந்த கதைகளும் கனவுகளும்-தான் இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த சத்யரஜித் ரே என்ற ஒரு சாதாரண ஓவியனை, மிக சிறந்த இயக்குனராக உலக சினிமா உயர்ந்து பார்க்கிறது.   
ஹெர்க்குலஸ் இன் நியூ யோர்க் படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்திருந்தாலும், முதல் வெற்றியை அடைய ஆர்னல்டு, சுமார் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிருந்தது.கானன் தி பார்பரியன் ரசிகர்களை கவர்ந்திட, டெர்மினெட்டர் மக்கள் மனதில் ஆர்னல்டை இடம் பெறச்செய்தது.தொடர்ந்து வந்த கமாண்டவும், பிரேடேட்டரும் சாதாரண நடிகனாக இருந்தவரை ஸ்டாராக மாற்றியது.

40 வயது ஆகிவிட்டது..வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு என்பவர்கள் இருக்கும் உலகில், LIFE BEGIN AT 40 என்பதற்க்கு ஆதாரமாய் ஆர்னல்டின் அனைத்து வெற்றிகளும் 40 வயதை கடந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது...ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்டதோடு நில்லாது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தின் கவர்னராக வெற்றிக்கண்டதை எண்ணும்போது அதிசயக்கவைக்கிறது.          
                                             
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு".. 
"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்" என்ற பாடல்களும் பழமொழிகளும்தான் ஞாபகம் வருகிறது        

ஹாலிவுட் சினிமாவின் எனது முதல் அறிமுகம் ஆர்னல்டும் அவரது திரைப்படங்களும்தான்..அவரது படங்கள் மீதான பைத்தியம் தீர்ந்தப்பாடில்லை..ஏறக்குறைய எல்லா படங்களும் பார்த்துவிட்ட நிலையில் எனக்கு பிடித்த டாப்-டென் ஆர்னல்டு திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் சமீபத்தில் உதித்தது..அதற்கான முன்னோட்டமாக இந்த பதிவு..மீண்டும் சந்திக்கலாம் "பார்வையோடு"..  
  
@@=======================@@=======================@@     
டாப்-டென் என்று சொல்லிட்டோமே என்று நினைத்து ஆர்னல்ட் நடித்த திரைப்படங்களை திரும்பவும் பார்க்காமல்..கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு RECALL செய்து பார்த்துவிட்டு எழுத ஆரம்பிக்கும் பதிவு..

ஆர்னல்டு படங்களை மீண்டும் பார்ப்பதும் நினைவில் மீட்டெடுப்பதும் சுகமாகவே இருக்கிறது..கொஞ்சம் பார்க்கலாம் வாங்க..

PREDATOR (1987)

ஓர் அடர்ந்த காடு--ஏழு கமாண்டோக்கள்--ஒரு ஏலியன்..இதுதான் ஒற்றை வரி அல்லது சூழ்நிலை என்று வைத்துக்கொள்வோம்.

உலகத்தில் உள்ள எல்லா இயக்குனர்களாலும் படமாக்கக்கூடிய சிம்பிள் கதை.ஒரு ஏலியன்..அதை சுற்றி மனிதர்கள் என்று கால காலமாக புளித்துப்போன கதையை இந்தா தோசை தரேன்..இட்லி தாரேன் என்று சொல்லி ஏமாற்றிய கதைகள் எல்லாம் ஹாலிவுட் மட்டுமல்ல உலகமெங்கும் நிகழ்ந்துள்ளது..இதே கதையை-படத்தை எடுக்கிறேன் அதாவது (சுடுகிறேன்) என்று சொல்லி தமிழில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் ரசிகர்களை கொலை செய்த சம்பவம் கூட நடந்திருக்கிறது.

கூ.த: நான் அதிகமாக பார்த்து ரசித்த படத்தை தமிழில் ரீமேக் என்ற பெயரில் பார்க்கப்போய் வெந்துப்போன கதை தனிக்கதை.அந்த படத்தின் பெயரை நீங்களே யூகித்துக் கொள்(ல்)ளு(லு)ங்கள்.  

ஏலியன் மீது அன்பும் பரிவும் ஏற்படுத்தியது ஈ.டி படமென்றால் அதற்கு நேர்மாறாக சிறிய வயதில் பயமுறுத்திய படம் ஒன்று உண்டு..அதுதான் பிரடேட்டர்..இந்த படம் பார்த்துவிட்டு தூங்க பயந்த, குளிக்கும் போது பயந்த காலம் எல்லாம் உண்டு..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...   

வெறும் 18 கோடி செலவில், ஜான் மெக்தியர்னன் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளிவந்து அமெரிக்காவின் எல்லா மூலைகளிலும் 100 கோடி வரை வசூல் புரிந்து அமோக வரவேற்ப்பை பெற்றது.

ஒரு RESCUE மிஷன்-க்காக காட்டுக்குள் செல்லும் ஏழு கமாண்டோக்கள்..பூமிக்கு வந்து மனித வேட்டை ஆடும் ஏலியனிடன் சிக்கித்தவிக்கும் சாதாரண கதையை அற்புதமான திரைக்கதையால் நகர்த்திருப்பர்.

ஹெலிகப்டரில் ஒவ்வொருவராக இறங்க, சிகார் பிடித்தப்படியே அறிமுகமாகும் ஆர்னல்டின் "டட்ச்" என்ற கதாபாத்திரம் படம் முழுவதும்  வெளிப்படுத்தும் முக பாவனைகள் தனி ஸ்டைல்...அதுவும் படத்தின் கடைசி அரை மணி நேரங்களை தன் தோள்களில் சுமந்து சென்றிருப்பார்.தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோயிசத்தை காண்பது அரிது..

படம் பார்க்காத ஒருவர் இப்பொழுது பார்த்தாலும் ஏதோ புது படம் மாதிரி FRESH ஆக இருப்பதை உணரலாம்.நீங்கள் ஆர்னல்ட் ரசிகரோ இல்லையோ ஆக்சன் ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.ஹாரர் பிரியர்கள் மிஸ் பண்ணாதிங்க.இதன் தொடர்ச்சியாக சில பாகங்கள் வந்தாலும் ஒரிஜினல் படத்தின் மகத்தான வெற்றியை பெற முடியாமல் போனதுதான் இந்த படத்தின் சிறப்பு.

ERASER (1996)

தமிழில் வந்திருக்குற விஜய்காந்த், அர்ஜூன் படம் மாதிரி ஏதாவது ஆர்னல்டு பண்ணிருக்காரா?? என்று கேட்டால் கூட இல்லை நினைச்சா கூட கட்டாயமா பார்க்க வேண்டிய படம் இரேசர்..நம்ம தமிழ் ஹீரோக்கள் நாட்டுக்கு அப்புறம் அதிகமா காப்பத்துன விஷயம் இருக்குனா அது கண்டிப்பா ஹீரோயினா-தான் இருக்கும்..அந்த மாதிரி ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றும் கதையிது..

உலகமெங்கும் குற்றவாளி மற்றும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்புகாக இருக்கும் ஒரு போலிஸ் பிரிவுக்கு Witness Protection System என்று பெயர்.இவர்கள் வேலையே சாட்சி சொன்னவர்களின் சொந்த அடையாளத்தை சிறிது காலம் அழித்துவிட்டு புது அடையாளத்தோடு பாதுகாப்பு வழங்குவதுதான்..இப்போது கண்டிப்பாக ERASER என்ற டைட்டிலுக்கான காரணம் புரிந்திருக்கும்..அந்த பிரிவின் முக்கிய போலிஸாக நம்ம ஆர்னல்டு..ஜான் கிரூகர் என்ற கேரக்டரில்..  

அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் செய்து கொடுக்கும் கம்பெனியான "சைரஸ்"..அதிநவீன ரக ஆயுதங்களை வெளிநாட்டு சதி கும்பலுக்கு விற்பதாக போலிஸ் சந்தேகப்பட, கம்பெனிக்குள் பணிப்புரியும் லீ குல்லென் என்கிற பெண்னை வேவு பார்க்க அனுப்புகிறது..அதன் தொடர்பாக சில உண்மைகள் வெளிவர, போலிஸுக்குள் இருக்கும் முக்கிய நபர்களே லீ-யை கொலை செய்ய முயற்சிக்க..கடைசிவரை எப்படி போராடி நம்ம ஆர்னால்ட் ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை..

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சுவாரஸ்யம் குறையாமல் 2 மணி நேரம் போவதே தெரியாமல் பார்க்கலாம்.ஆக்சன் காட்சிகளில் ஆர்னல்டின் வேகமும் படத்தின் பாதியில் வரும் விமான சண்டையும் ஹைலைட்..James Caan, Vanessa Williams போன்றவர்களின் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை தந்த படமிது.அதுவும் Pastorelli கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கவர்கிறார். ஆர்னல்டின் சிறந்த ஆக்சன் லிஸ்ட்டில் கட்டாயமாக இரேசர்-க்கு இடமுண்டு.  

COMMANDO (1985)

ஆர்னால்டை ஒரு முழுமையான ஆக்சன் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்த்திய வெற்றி படம் கமாண்டோ..படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் கும்பல், குப்பை லாரியில் வந்து ஒருத்தரை போட்டுத் தள்ளுகிறார்கள்..வரிசையாக மேலும் இருவர்..யாருய்யா இவனுங்க என்று நினைப்பதற்குள், அடுத்த காட்சி..ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான சிறந்த அறிமுக காட்சி..

பெரிய மரக்கட்டையை தோல்களில் தூக்கிக்கொண்டு வரும் பலமிக்க கைகளை சூம் பண்ணியவாரு தொடங்கும் டைட்டில் கார்டு படத்தின் மீதான ஒட்டு மொத்த மூடை கிளப்பிவிட்டிடும்..நம்ம ஆர்னல்டு முன்னால் DELTA FORCE பிரிவை சேந்தவர்.. அதாவது தீவிரவாதத்துக்கு எதிராக இயங்கும் ஒரு பிரிவு..இவர்களது பணியே தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட HOSTAGE-களை காப்பாற்றுவதுதான்.

இப்போது அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று தன் மகளுடன் வசித்து வரும் ஆர்னால்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மேலும் அவருடன் ஒரே யூனிட்டில் பணியாற்றிய மூன்று பேரும் கொல்லப்படடதாகவும் மேல்- அதிகாரி எச்சரித்துவிட்டு போகிறார்..இவர் இப்படி போக, கெட்டவர்கள் அப்படி வரவே பெரும் போராட்டத்தில் ஆர்னல்ட் மற்றும் மகளை கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.Val Verde (Fictional Country)  ஜனாதிபதியை கொலை செய்ய ஆர்னால்டை மிரட்டுகிறது. மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்க..மிச்ச மீதி கதையை நான் சொல்ல வேண்டியதில்லை.ஆர்னல்ட் தன் மகளை காப்பாற்ற போராடும் காட்சிகளை மிரட்டலான ஆக்சன் மூலம் உருவாக்கிருப்பார்கள்.பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்.

ரேம்போ, டை ஹார் வரிசையில் காமாண்டோ ஹாலிவுட் வரலாற்றில் மிக சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்றாக சொல்கிறார்கள்.EXORCIST படத்தின் பாதிப்பில் 100 ஹாரர் படங்களாவது எப்படி வந்திருக்குமோ அதே மாதிரி காமாண்டோ.பக்கா சண்டை படத்துக்கு உதாரணம்.இந்த படத்தின் பாதிப்பு நிறைய இந்திய சினிமாவிலும் பார்க்கலாம். கேட்டால் இன்ஸ்பிரஷன் என்று சொல்வார்கள்.சரி இந்த பிரச்சனை வேண்டாம்..

ஆர்னல்ட் நடிப்பில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று படங்களை இன்று பார்த்தோம்..இன்னும் சில படங்களை எழுதலாம் என்ற நினைப்பில் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge