Follow by Email

Alfred Hitchcock "The Master Of Suspense"


ஹிட்ச்காக் திரைப்படங்கள் சுவாரஸ்யமானவை..பார்ப்பதற்கு மட்டுமல்ல எழுதுவதற்கும் கூட..கமர்ஷியலான ஹாலிவுட் படங்களிருந்து வெளிவந்து ஆங்கில சினிமாவின் வாசலுக்குள் அடியெடுத்து வைப்பவர்களின் ஏறக்குறைய முதல் அறிமுகம் ஹிட்ச்காக்-காக இருந்தாலும் ஆச்சரிப்படுதற்கில்லை.காரணம், சினிமா எனும் கலையை மிக நேர்த்தியாக பயன்படுத்தி வெகுஜன மக்களும் புரிந்துக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் விதமான திரைப்படங்கள் எடுத்து வெற்றி கண்ட முதல் தர இயக்குனர்களில் முதன்மையானவர் ஆல்ஃபெரெட் ஹிட்ச்காக்.

அவரா..? அவர் வெறுமனே மக்களை பயமுறுத்தி சம்பாதித்தவர் என்றும், சாதாரண ஹாரர் படம் எடுப்பவர்தானே!! என்று சொல்லும் மக்களும் உள்ளனர்.அவை ஏறக்குறைய சினிமாவை வெறும் கமர்ஷியலுக்காக, நேரம் கழிக்க உதவும் கருவியாக பயன்படுத்தும் பார்வையாளர்களின் கருத்தாகதான் இருக்க முடியும்..

கலையை நேசிக்கும், சாமான்ய மக்களின் வாழ்வியலை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, நாடு-மொழி-இனம் கடந்து மனித உறவுகளை சித்தரிக்கும், அன்பு, பாசம், மனித நேய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக சினிமாவை உற்றுநோக்கும் பார்வையாளனுக்கு ஹிட்ச்காக் போன்ற படைப்பாளிகளின் திரைப்படங்கள் மன நிறைவை தரும் அனுபவங்களாக இருக்கலாம்.

மௌனத் திரைப்பட காலத்தை தொடர்ந்து, வண்ண சினிமா வரை சினிமாவின் மிக முக்கியமான வளர்ச்சிகளை நேரில் இருந்து உணர்ந்து மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு  காலக்கட்டத்திலும் பல வெற்றி படங்களை கொடுத்த அரிதான இயக்குனர்களில் ஒருவர்.

மாஸ்டர் ஒஃப் சைஸ்பென்ஸ் என்று செல்லமாக அழைக்கபடும் ஹிட்ச்காக் The Pleasure Garden தொடங்கி Family Plot வரையென கிட்டத்தட்ட தனது வாழ்நாளில் 53 படங்களை எடுத்திருக்கிறார்..நாடகத்தனமான சினிமாவை, வெறும் போர், காதல், வெஸ்டேர்ன்  என்று ஒரே தளத்தில் இயங்கிக்கொண்டிருந்த சினிமாவை தனது தனித்தன்மையால் எதார்த்தமான திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்றாலும் மிகையாகாது.அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் திகில், பயம்..

காதலை படமாக்கலாம்..நடிகர்கள் போதும்..
வரலாறு, போர் போன்ற விஷயங்களை கூட படமாக்கலாம்..அதற்கு பிரமாண்டமான செட், சண்டை காட்சிகள் போதும்..
பயத்தை எப்படி படமாக்குவது?? காரணம், வித விதமான ஹாரர் படங்கள் எடுத்து "மாஸ்டர் ஒஃப் ஹாரர்" என்று புகழப்படும் இத்தாலியின் டாரியோ அர்ஜெண்டோ-வே "நான் மாஸ்டர் இல்லை..என்னுடைய மாஸ்டர் ஹிட்ச்காக்"-தான் என்று சொல்லும் அளவுக்கு..அப்படி என்னதான் செய்தார்..?

மிக எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பேயே இல்லாமல் ஹாரர் திரையுலகில் புகழ்பெற்று, அதிக படங்கள் எடுத்தவர் ஹிட்ச்காக் மட்டும்தான்..ரத்தத்தையும் சத்தத்தையும் குறைத்து காட்சிகள் ஊடே மனிதனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த திகிலை, பயத்தை மெல்லமாக கிளப்பிவிட்டு சென்ற மாபெரும் இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். அன்றுவரை டிராகுலாவையும், சாத்தானையும், மோன்ஸ்டர்களையும், ஏலியனையும் காட்டி பயமுறுத்தி, பார்வையாளர்கள் புளித்துப்போன நிலையில் "போதும் விடுங்கப்பா" என்று சொல்லும் சூழலில், ஹாரரில் ஹிட்ச்காக் கொண்டுவந்து புகுத்திய புதுமைகளும் புதிய கான்செப்டுகளும் அன்றைய மக்களிடையே பர-பரப்பையும் இன்றைய மக்களுக்கு ஆச்சரியத்தையும் தருகிறதென்றால் மிகையாகாது..

உதாரணத்துக்கு சைக்கோ, வெளி உலகத்துக்கு சாதாரணமான மனிதனாக இருக்கும் ஒருவனின் உளவியல் சார்ந்த குழப்பங்களை அவ்வளவு எளிமையாக திகிலாக யாருமே எடுத்ததில்லை..இங்குள்ள கொலைக்காரன் பைத்தியம் இல்லை..மன நிலை பாதிக்கபட்டவன்..பைத்தியக்காரனுக்கும் மனதளவில் குழம்பியவனுக்குமான இடைவெளியை நாசுக்காக சொன்ன முதல் படம் அநேகமாக இதுவாக தான் இருக்கும்..இந்த படத்தின் பாதிப்பில் சிவப்பு ரோஜாக்கள்..மூடுபனி என்று தமிழில் கூட பார்க்கலாம்..சைக்கோவில் ஆண்டொனி பெர்க்கின் என்றால் இங்கு கமல்..அங்கு ஒரு மோட்டெல் என்றால் இங்கு கமலின் வீடு..கமல் கதாபாத்திரத்தின் பின்னனியை உளவியல் ரீதியான பாத்திப்புகளை Flashback காட்சிகளின் மூலம் மிகவும் விளக்கமாக சொல்லிருப்பார் பாரதிராஜா..அதை விளக்க பாரதிராஜாவுக்கு சில காட்சிகள் தேவைப்படுகிறதென்றால் ஹிட்ச்காக்-க்கு கடைசி காட்சி வசனங்களே போதுமானதாகிறது..

தி பேர்ட்ஸ் படத்தில் பறவைகள் மனிதர்களை தாக்குவாதாக அவர் அமைத்த காட்சிகள்..இறுதிவரை அதற்கான காரணங்களை பதிவு செய்யாமல் படம் பார்த்தவர்களே முடிவு செய்யும் படி விட்டிருப்பார்..கொரில்லா, கிங்க்காங் என்று மனித வாழ்க்கைக்கு அப்பால் மறைந்துவிட்ட நிஜமற்ற மிருகங்களை மட்டுமே பெரிய திரையில் பார்த்து பழகிய ரசிகர்கள் கண்டிப்பாக மிரண்டிருப்பார்கள்.. அமைதிக்கு ஆதாரமாய் பறவைகள்...திடீரென்று மனிதனுக்கு எதிரானால்..

நைட் சாமளன் இயக்கிய தி ஹேப்பனிங் படத்தில் மனிதர்கள் உயிர் வாழ உதவும் காற்றே மனிதர்களுக்கு எதிராக உருவாவதை படமாக்கிருப்பார்..சிறிது நாட்களுக்கு மிறகு அதுவே சரியாக, மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு மனிதர்கள் திரும்புவார்கள்..ஏன் நடந்தது..எதுக்காக நடந்துதது போன்ற காரணங்கள் பெரிதாக பேசப்பட்டிருக்காது..
 
தி பேர்ட்ஸ் படத்திலும் அப்படிதான்..ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் பறவைகளின் தாக்குதல் சில நேரம் கழித்து சரியாவது போலான காட்சியமைப்பை இறுதியில் காட்டிருப்பார்..படத்தின் தொடக்கம் முதலே பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதை, மனிதர்களின் கைகளுக்குள் அடிமையாக இருப்பது போல சித்தரித்திருப்பார்..அதுவும் படத்தின் இறுதி ஷாட்டில் ஆயிரக்கணக்கான பறவைகளை படமாக்கிய விதம்..கண்களை விட்டு அகலாது.மனிதர்களாகிய நாம்தான் உலகின் ராஜாக்கள் என்ற மமத்தை, கர்வம் சுக்கு சுக்காக உடைவதை இது போன்ற படங்கள் பார்க்கும் போது உணரலாம்..இயற்கையின் மீதான நமது பார்வைகள் சீர்த்திருத்தம் கூட அடைய வாய்ப்பு உள்ளது.

ஹிட்ச்காக்-கின் ஆக சிறந்த படமாக வெர்ட்டிகோ-வை குறிப்பிடுபவர்கள் உண்டு..முதன் முதலாக இந்த படம் பார்த்த போது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..என்னை போன்ற 25 வயதுக்கு குறைவாக உள்ள எந்த ஒரு நபருக்கும் பிடிக்காமல் போகவும் வாய்ப்புண்டு.கதையின் One Line படிக்கும் போது இருந்த ஆர்வம் படம் பார்க்கும் போது இல்லையே என்ற எண்ணம் கூட உதிக்கலாம்.சமீபத்தில் இந்த படத்தை திரும்பவும் பார்க்க நேரம் கிடைத்தது.பிடித்திருந்தது..

ஒரு சில நாவல்கள், புத்தகங்கள், திரைப்படங்களை புரிந்துக்கொள்வதற்கு அதைவிட உள்வாங்கிக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பக்குவம் முக்கியம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்..இது எல்லோருக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தலாம்..ஸ்டான்லி குப்ரிக்-கின் சில முக்கியமான படங்கள் வெளிவந்த காலத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் புறக்கணிக்கபட்டதாக படித்ததுண்டு..காரணம் சில படைப்புகளை புரிந்துக்கொள்வதற்கு ஒரு வித பக்குவம் (MATURITY & KNOWLEDGE) அவசியமாகிறது..

மர்டர் மிஸ்டரி, சஸ்பென்ஸ், ஹாரர் போன்ற அம்சங்களில் எடுத்தாலும், தான் எடுக்கும் படங்கள் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்துள்ளார் என்பதை அவரது படங்கள் தொடர்ந்து பார்க்கும் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ளலாம்..அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் கதாபாத்திர அமைப்புகளும் இன்றுவரை மறக்க முடியாது..

ஹிட்ச்காக்-கின் ரியர் விண்டோ, ரோப்ஸ் படங்கள் பார்த்தவர்கள் இந்த கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியும்..
ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில், வீல்ச்சேரில் கதாநாயகன்..இந்த கேரக்டரை வைத்து ஒரு திரில்லரை யோசிக்க முடியுமா ? ஹிட்ச்காக்-கை கேட்டால் ரியர் விண்டோ-வை காட்டுவார்..உயரத்தை கண்டு பயப்படும் போலிஸ்க்காரனை வைத்து ஏதாவது சுவாரஸ்யமான கதை சாத்தியமா ? சாத்தியம் என்று சொல்லி நம் முன் வெர்டிகோவை நிறுத்துவார்..ஒரு போட் (BOAT)-உயிருக்கு போராடி வந்து சேரும் சில மனிதர்கள்..கடலில் அதுவும் ஒரே போட்-டை வைத்து ஒரு முழு படம் தர முடியுமா? இதோ இருக்கே என்று லைவ்போட் படம் போட்டு காண்பிப்பார். 

தன் சொந்த கதைகளை படமாக்குவதை 1930-களிலேயே நிறுத்திவிட்ட ஹிட்ச்காக்-கால் பிறரது கதைகளை எப்படி இவ்வளவு அபாரமாக உள்வாங்கி சிறந்த திரைவடிவத்தை தர முடிந்தது என்பது வியப்பை அளிக்கிறது.குறைந்த கேரக்டர்கள்..குறைவில்லாத மர்மம்..சாதாரணமாக கொலைகளை காட்டிவிட்டு இறுதியில் கொலைகாரனை காட்டும் படங்களுக்கு நேர் எதிராக கொலைகாரனை காண்பித்துவிட்டு சீரியல் கில்லெர் படம் எடுக்கும் அசாதாரணமான தைரியம் இவரிடம் இருப்பதை காணலாம்..Frenzy படத்தில்... 
இவருடைய சினிமா தாக்கத்தில் இதுவரை ஏன் இன்றும் எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் ஏராளமானவை..தமிழ் படங்களை பட்டியலிட்டால்..கதை மட்டுமில்லை காட்சிகளை கூட உதாரணமாய் காட்டலாம்..தனது சொந்த படத்தையே ரீமேக் செய்து வெற்றி கண்ட முதல் இயக்குனர் ஹிட்ச்காக் என்றாலும் மிகையாகாது..     

ஹிட்ச்காக் இயக்கத்தில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் THE TROUBLE WITH HARRY..ஒரு பிணம்-அதை சுற்றி சில மனிதர்கள்-யார் கொன்றது? இதுதான் படத்தின் ONE LINE..தன்னால் நகைச்சுவை கலந்த மர்டர் சஸ்பென்சும் தர முடியும் என்று நிரூபித்திருப்பார்..அந்த மரணத்தை பற்றிய ஒவ்வொரு மனிதனது கண்ணோட்டத்தில் பிளேக் காமெடி வடிவத்தில் அசத்தியிருப்பார்.இதுவரை நான் பார்த்த ஹிட்ச்காக் படங்களின் லிஸ்டை தந்துள்ளேன்..இன்னமும் பார்க்க நிறைய உள்ளது..பார்த்த படங்களை பற்றி மேலும் எழுத வேண்டும் என்ற ஆவல் கூட உள்ளது..ஹிட்ச்காக் சினிமாவின் ஒளிப்பதிவு, இசை, காட்சியமைப்பு, கதாபாத்திர அமைப்பு என்று ஒவ்வொரு பிரிவை பற்றியும் இன்னும் விவரமாக எழுதலாம்.அவ்வளவு இருக்கிறது..என்னைவிட சிறந்த ரசிகரால் இதைவிட தெளிவாக, கலை அறிவோடும் நிச்சயம் எழுத முடியும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Marnie (1964)

பலராலும் மறக்கபட்ட, ஆனால் கொண்டாட வேண்டிய ஹிட்ச்காக்-கின் இன்னொரு அக்மார்க் சைக்கலோஜிக்கல் மாஸ்டர்பீஸ்..  1964-ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் மார்னி-யாக "தி பேர்ட்ஸ்" புகழ் டிப்பி ஹெட்ரென் மற்றும் ருட்லண்ட்-டாக நமது "ஜேம்ஸ் போண்ட்" சான் கேனரி நடித்திருக்கின்றனர்..எனக்கு என்னவோ சைக்கோ படத்தின் "ஜூனியர்" வேர்சன் என்றே சொல்ல தோன்றுகிறது.


இடி, மின்னல்..பிறகு சிவப்பு கலர் கண்டாலே அலரி அடித்து ஓடுபவர் மார்னி..ஆனால், திருடுவதில் கைந்தேர்ந்தவர்..சில வேலை பார்த்த இடங்களில் பணம் திருடிவிட்டு, இறுதியாக ருட்லண்ட-னின் கம்பெனிக்கு வேலைக்கு வருகிறார்..இங்கும் திருடப்போய் கையும் களவுமாக ருட்லண்டி-டம் மாட்டிக்கொள்ள போலிஸில் மாட்டிக்கொடுக்காமல் மார்னி-யையே திருமணம் செய்துக்கொள்கிறார்..ஆனால், மார்னி-க்கோ உளவியல் ரீதியான பிரச்சனைகள் அதிகம்..சிறு வயதில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் அவரை மனரீதியாக புரட்டிப்போடுகிறது..இதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை ஆராய முயற்சிக்கும் ருட்லண்ட் அதில் வெற்றிக்கண்டாரா? மார்னி-க்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதுதான் படத்தின் உச்சம்..

நாவலை திரைக்கதையாக்கி அதற்கு சிறந்த திரைவடிவத்தை கொடுத்திருக்கும் ஹிட்ச்காக்-கை எப்படி பாராட்டுவது..அதுவும் மிகவும் சீரியஸான ஒரு சப்ஜெக்..கொஞ்சம் சிக்கலான சிறு வயது பாலியல் பிரச்சனைகளை நாசுக்காக கையாண்ட விதம் எத்தனை காலமானாலும் பாராட்டலாம்..பெர்னார்ட் ஹெர்மனின் இசைக்காகவே இன்னொரு முறைம் பார்க்கலாம்.Must Watch.

The Trouble with Harry (1955)

ஹிட்ச்காக்-குக்கே பிடித்த படமிது..
Logic, Practical என்று சில விஷயங்களை ஒதுக்கிவிட்டு, சந்தோஷமாய் பார்த்து மகிழ்வதற்கு ஒரு ஹிட்ச்காக் படமிது..அவரது ஆஸ்த்தான நடிகர்கள் இல்லாமல், ரொம்ப பரிச்சயமாகாத சில நடிகர்களை வைத்து 1955-ல் வெளிவந்த ப்ளேக் காமெடி வகையிது..எங்க நம்ம காமெடி படம் எடுத்தா பார்க்கமாட்டாங்களோ என்ற சந்தேகம் இருந்ததோ என்னமோ, தன்னுடைய வழக்கம் போலான கொலை அதை சுற்றி நிகழும் மர்மத்தை பின்னி நகைச்சுவையான அனுபவத்தை தந்திருக்கிறார்.நடிகை ஷெர்லி மெக்லேனின் முதல் படம் இது

ஓர் அழகான, பசுமை நிறைந்த இடத்தில் கதை ஆரம்பமாகிறது..சின்ன பையன் ஆர்னி தன் துப்பாக்கியில் விளையாண்டுக் கொண்டே வர, அங்கு காட்டுக்குள் இருக்கும் ஒரு பிணத்தை காண்கிறான்..பயந்தப்படியே ஓட..அந்த வழியே முயலை வேட்டையாட வரும் கேப்டன் வைல்ஸ்-உம் பார்த்துவிடுகிறார்..நம்மதான் தூரத்துல இருந்து தப்பா சுட்டு விட்டோமோ என்ற பயம் வேறு..அவர் தவிர மிஸ் க்ரேவ்லி, ஹீரோவான மார்லோவ் போன்றவர்கள் தற்செயலாக பிணத்தை பார்த்திட..யார் கொலை செய்தார்கள் என்று குழம்புகிறார்கள்..இதற்கிடையே அந்த பிணத்தின் பெயர் ஹேரி என்று தெரிய வருகிறது..அவர்தான் நமது ஹீரோயினான  ஜென்னிபெ-ரின் முன்னாள் கணவன் என்று அறிந்துக்கொள்கிறார்கள்..அதை தொடர்ந்து நிகழும் சூழல்கள், நிகழ்வுகளை நகைச்சுவையோடு படமாக்கிருக்கிறார் ஹிட்ச்காக்..

6 கதாபாத்திரங்கள் அதை சுற்றி பிணம்..இதுதான் கதைக்கரு..அதை வைத்து எப்படியெல்லாம் சுவாரஸ்யமாக திரைக்கதையை நகர்த்த முடியுமோ அவ்வளவு சாமர்த்தியமாக நகர்த்திருக்கிறார்கள்...அதுவும் டைட்டில் கார்டு தொடங்கி வரும் பெர்னார்ட் ஹெர்மனின் இசையோடு கலந்துவிடுவோம்..எப்படா மூசிக் வருமென்று இருக்கும்..ஆர்னி முதல் காட்சியில் பிணத்தை பார்க்கும் போது ஒரு லோ ஏங்கிள் ஷாட் வச்சிருப்பார் பாருங்க..அப்படிதான் இருக்கும்.

அநேகமாக எனக்கு தெரிந்து ஹிட்ச்காக் எடுத்த மிக ஜாலியான படம் இதுவாகதான் இருக்கும்..பிற படங்கள் போல பெரிய வெற்றியெல்லாம் கிடைக்காவிட்டாலும், ஹிட்ச்காக் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பீஸ் இது.    

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge