ஆறு மாதங்களாக பார்க்க நினைத்த ஓர் இந்திய படைப்பு.சில தடைகள், மறுப்புக்களுக்கு பிறகு முதன் முறையாக பார்த்த போது கிடைத்த சந்தோஷம் அதிகமானது.படம் முடிந்த பொழுது மனதில் நிறைவு.ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான சினிமாவை கண்டதாக (இந்திய படங்கள் பார்ப்பது அரிதாகிவிட்டது..அட தமிழயும் சேர்த்துதாங்க.) ஒரு பிரமிப்பு, ஒரு வழியாக ஆசையும் தீர்ந்தது.

ஹிந்தி திரையுலக ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத படம் லகான்.அமிர்க்கானும் அவுத்தோஷ் கௌரிக்கரும் இணைந்து இந்திய சினிமாவின் ஆஸ்கர் கனவை நிறைவேற்ற சென்ற ஆண்டு 2002.அது தோல்வியில் முடிந்ததை இந்திய சினிமா வரலாற்றில் ஒரு கறும் புள்ளியாகவே சொல்லக்கூடும்.அத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பெற்ற சர்வ ரீதியிலான அங்கிகாரத்தை வலுப்படுத்த, 2004-ம் ஆண்டு இம்முறை சாருக்கானுடன் இணைந்த வெற்றிப்படைப்புதான் ஸ்வதேஷ்.வெற்றி என்பதை வெறும் வசூல் ரீதியில் வைப்பின் எப்படியும் இந்தியாவில் தோல்விதான்.ஏனோ சிறந்த படைப்புகளை சில நேரங்களில் ரசிகர்கள் கண்டுக்கொள்வதில்லை.
இந்தியாவின் வெற்றிக்கனிகளை வெளியிலிருந்த கேள்விப்பட்ட எனக்கு, அங்கு நிகழும் ஏழ்மை, ஜாதி மத வேறுப்பாடுகள், இன்றுக்கூட கேள்விக் குறியானதுதான்.தமிழ் சினிமாவில் பார்த்ததை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியுமோ சொல்லுங்கள் ?? உண்மையிலேயே அது அவ்வளவு சீரியஸானதா ? என்ற அறியப்படா கேள்வியை மனம் எப்போதும் கேட்டுக்கொள்ளும்.
ஸ்வதேஷ் திரைப்படம் முன்னிறுத்தும் முக்கியமான அம்சங்களில் ஜாதி, மத அவலங்களும் ஒன்று "இவர்கள் இங்கு வரக்கூடாது..இவனது ஜாதிக்கு இதுதான் எல்லை..அவன் கீழானவன்..அவன் மேலானவன்" என்று காலகாலமாக கடவுளின் குழந்தைகளை துன்புறுத்தும் ஜாதிகளை அறிந்துக்கொள்வதற்கு இன்னொரு அறிமுகமாக அமைந்ததே இத்திரை அனுபவம்.எல்லாவற்றையும் தாண்டி, மனிதனாக பிறந்தவனுக்கு வாழ் நாளில் ஏழ்மை என்பது சாபக்கேடாக மாறிவிட்டது.அநேகமாக மற்ற நாடுகள் நம் தேசத்தை (பிறப்பால் நான் மலேசியனாக இருந்தாலும் படைப்பால் நானும் இந்தியந்தான்..என்னளவில்) பார்த்து ஏளனப்படுத்த சொல்லும் ஒரே விஷயம் பரிதாபத்துக்கு உரிய ஏழ்மையாகதான் இருக்கும்.ஏழ்மை என்பது எங்கில்லை !! பணம் மட்டுமே ஏழ்மையை நிர்ணையிக்கும் ஆயுதமாக விளங்கும் போது மனதை வைத்துக்கொண்டு என்ன செய்வதோ ?
வெளிநாடுகள் என்பது மாயத்தேசம் என்பதை எங்கோ படித்த ஞாபகம். பிறந்த நாட்டையும் உறவுகளையும் ஏன் பெற்ற தாய்த் தந்தையரையும் மறக்கவைக்ககூடிய எண்ணிலடங்காத மோகங்கள் அங்கு.ஸ்வதேஷ் என்றால் தேசம் அல்லது நாடு என்று பொருளாக்கலாம்.சொந்த நாட்டையும் தூக்கி வளர்த்த உறவுகளையும் மறந்துவிட்டு இன்று சுயனலங்களோடு வாழ்ந்து பூரித்து போய் வருபவர்கள் எத்தனைப் பேரோ ? நான் அறியேன்..
மோகன்பாபு (சாருக்) பல வருடங்களாகவே அமெரிக்க நாசாவில் பணிப்புரிந்து வரும் இந்தியன்.தனது பெற்றொரை சாலை விபத்து ஒன்றில் இழந்தவர்.அவர்கள் இறந்த தினத்தன்று, சிறிய வயதிலிருந்தே தூக்கி வளர்த்த காவேரி அம்மாவின் நினைவுகள் அவரது ஞாபகத்தை எட்டுகிறது. அவரை இறுதியாக சந்தித்து பல வருடங்கள் ஆகின்றன.அவர் எங்கு ? எப்படி உள்ளாரோ என்ற வருத்தம் மோகனுக்குள் வரவே, அவரை பார்த்து அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்ற ஆசையோடு இந்தியா வருகிறார்.அங்கு, காவேரி அம்மா ஏதோ ஒரு ஊரில் வசிக்கிறார் என்று அறிந்துக்கொண்டு வந்தும் சேர்கிறார், சந்திக்கிறார், பேசுகிறார் : பாசம் புதுப்பிக்கப்படுகிறது : கூடவே கீதா என்ற பெண்ணுடன் காதல் வேறு பூக்கிறது.ஊரெங்கும் ஜாதி பேதங்கள், உயர்வுத்தாழ்வுகள், கல்வியறிவற்ற மனிதர்கள், தவறாமல் கிடைக்கும் மின்சாரம் கூட அங்கு நிலையாக இல்லை..இதுவெல்லாம் மோகன்பாபுவின் கண்களுக்கு புலப்படுகிறது. இதற்கிடையே காவேரி அம்மாவை அழைத்துச் செல்வதற்கு கீதா வேறு தடையாக இருக்கிறார்..இந்த பிரச்சனைகளுக்கு நடுவே, அம்மாவை அழைத்து செல்வாரா மோகன் ?? இல்லை என்ன நடந்தது ? என்பதை திரையில் அறிவதை அன்றி வேறு வழி இல்லை.
சினிமாவில் எப்பொழுதாவது சில முறைகள்தான் ஒரு நடிகன், நடிகை என்பவர் அதன் கதாபாத்திரமாகவே மாறி தங்களது நடிப்பை வெளிப்படுத்துவதை பார்த்துள்ளேன் : உணர்ந்துள்ளேன்.அந்த வரிசையில் சாருக்கான்...மோகன் பாபுவாக வந்து மோகன் பாபுவாகவே சென்றிருக்கிறார். எளிமையான இயல்பான நடிப்பு.எந்தெந்த இடத்தில் எது வேண்டுமோ அதை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.அதுதான் படத்தின் பெரிய பலம்.அவரைத்தவிர கீதாவாக Gayatri Joshi, அறிமுகம் மாதிரியே தெரியவில்லை.அழகிய கண்களோடு ஒல்லியாக வந்து நெஞ்சை பிளிந்துவிட்டார்.
அவருக்கும் நம்ம ஷாருக்கானுக்கும் இடையிலான உறவு அவ்வளவு எளிமை : இளமை : புதுமை : உண்மையில் இவ்வளவு எதார்த்தமான காதல் காட்சிகளை சமீபத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லை.அவர்களுக்குள் முதல் சந்திப்பே சுவாரஸ்யம்.தொடர்ந்து வரும் சந்திப்புகளுக்கு இடையே... சாரி...பின்னே ஒலிக்கும் நமது ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசை இருக்கிறதே..இன்னொரு அசத்தல்.காட்சிகளின் வேகத்துக்கும் பொறுமைக்கும் ஈடுகொடுத்து சக்கை போடு போடுகிறது.
அதோடு பாடல்களும் அருமை.படத்தின் முதல் பாடலான "உன்னைக் கேளாய் நீ யாரு" (தமிழில்), மறக்கவே முடியாது என்னால்..உண்மையில் படம் பார்ப்பதற்கு முதன்மை காரணமும் இதுதான்.சில வருடங்களுக்கு முன்பு ரகுமானின் தீவிர ரசிகனான பிறகு அவரது பாடல்களை செவிச்சாய்த்தா போது, சிக்கிக்கொண்ட பாடல்.ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் தன்னம்பிக்கையை வழங்கும் அர்த்தமுள்ள வரிகள் நிரம்பியது.விஷுவலாக பார்த்த போது சற்று ஏமாற்றம் தந்தது உண்மைதான்.மற்றப்படி கிரேட்.அதைத்தவிர கேட்ட..சாவரியா..சாவரியா, டேக்கோ நா..பாடலை இன்னமும் வரியே தெரியாது முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்..பாடகர் உதித் நாராயணன் அவர்களுக்கு தேசிய விருது வாங்கி தந்த பாடலும் இதில் உள்ளது.
படம் நெடுகே பல காட்சிகள், மூன்றைரை மணி நேரத்தை நல்ல வழியில் செலவழித்தேன் என்ற திருப்தியை அளித்தது.அதிலும் குறிப்பாக அவ்வப்போது ஊரில் கரெண்டு கட் ஆகும் போது, டக்கென்று என் ஐன்ஸ்டன் மூளைக்கு எட்டியது பல இடங்களில் நிகழும் மின்சார பிரச்சனைதான்.
ஸ்வதேஸ் - முழுக்க முழுக்க ஒரு உண்மையான இந்திய படைப்பு.சொந்த தேசத்தில் படித்துவிட்டு கால காலமாக வெளிநாட்டில் வசிப்பவர்களை ஒரு முறையேனும் தங்களது நாட்டை எட்டிப்பார்க்க சொல்லும் படம். அங்கு நிகழும் அவலங்களை அறிந்துக்கொள்ளும்படி செய்ய கேட்கும் ஒரு பாடம் என்றும் சொல்லலாம்.மற்றப்படி என் சொல்வேன், ஒரு நல்ல படத்தை உங்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைத்ததில் மனம் மகிழ்கிறேன்.
இதையெல்லாம் ஒரு விமர்சனமா !! என்று நீங்க நினைத்தாலே நான் செய்த புண்ணியம்..கட்டாயம் பாருங்கள்.ஒரு குத்துப்பாட்டு, தொப்புள் ஆட்டம், கவர்ச்சி கன்னிகள், கரெண்டு கம்பத்தில் சிக்குன மாதிரி சண்டையிடும் காட்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு சூப்பரான, தூய்மையான சினிமா.
=============================================================================
கொசுருத்தகவல் : இந்த படத்துலங்க..ஒரு பாட்டுங்க.டேக்கோனாவோ.
டீக்கோனாவொனு எப்படியோ வரும்.அந்த பாட்டோட மெட்டு வேறெதுவும் இல்ல.நம்ம பாபா படத்துல தலைவரு ஆடுன பாபா..கிச்சு..கிச்சுத்தா.தா தாங்க.சும்மா வெளிநாட்டுக்கு போய் டங்கு டங்கு-னு ஆடுறதையே எடுக்கிற டைரக்டர்ஸ் கண்டிப்பா இத பார்க்கணும்..எவ்வளவு அழகா எடுத்துருப்பாங்க பாருங்க.சபாஷ் டூ டைரக்டர், சாருக், And ஹிரோயின்.எனக்கு ரொம்ப பிடிச்சது.Please Watch.
உங்கள் ஆதரவுடன்
