Follow by Email

Monday, 17 October 2016

Oscar Kanavu..

இந்திய திரைத்துறைக்கு ஒரு அமீர்கான் போதுமா..முடிந்தால் நூறு..
திரை வாழ்வில் குறைந்தது ஒரு தடவை என்கிற வீதம் சற்றே இந்திய சினிமாவின் 100 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறைகளாவது...ஆஸ்கரு-க்கோ-கோல்டன் குளோப்பு-க்கோ சும்மா நாமினேஷன்ஸ் ஆவது கிடைத்திருக்கும்..
மூன்றாம் உலக நாடுகள் எல்லாம் உலக விருதுகளை அள்ளும்போது, இந்திய மொழிகள் பேசும் படங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏனோ ஏக்கத்தை தருகிறது..சினிமாவுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும்..மதம் சார்ந்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நடுவே மனம்சார்ந்த படங்கள் குறைந்துவிட்டது..எதார்த்தத்தை விட்டு நாம் எங்கோ விலகி வந்துவிட்டோம் போலும்..பல இயல்பான கதைகளை திரையில் சொல்வதற்கு பதிலாக மசாலாக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

நானும் படம் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு இந்திய மசாலாக்களை உறிஞ்செடுத்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் கொடூரமான விஷயம் இங்கு மலேசிய தமிழ் சினிமாவிலும் நடந்துக்கொண்டிருக்கிறது..நாடக்கதனம் கலக்காத எதார்த்த காட்சி ஒன்றைக்கூட முழுமையாக கண்டதாக ஞாபகம் இல்லை..எதற்காக இவர்கள் இந்திய படங்களை, முக்கியமாக தமிழ் சினிமாவை நோக்கி பயணிக்கிறார்கள் என்றும் தெரிந்தப்பாடில்லை..

ஆனால் சீன, மலாய் இனத்தவர்களால் எடுக்கபடும்  மலேசிய மற்றும் சிங்கப்பூர் திரைப்படங்கள் ஒரு சில கேன்ஸ் வரை போகிறது..உலக விருதுகளை நோக்கி பயணிக்கிறது..ஒரே நாடு-ஒரே சினிமா..இந்த பிரிவினைக்கு காரணம்??

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களாக-தொழில் நுட்ப கலைஞர்களாக அறியப்படும் பலர் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்..உலக சினிமாவின் அறிவு, அனுபவங்களை கொண்டவர்கள்..முதல் சில படங்களின் மூலம் "ஆஹா என்ன டைரக்டருல" என்று சொல்லுமளவுக்கு இருப்பவர்களில் பலருக்கு 3, 4 படங்களுக்கு பிறகு கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்ற நிலை வேறு..

தமிழ் சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.ஒன்று, மசாலா..இரண்டாவது. புது முயற்சி அல்லது வித்தியாசம்..இதில், சொந்தமாக அதுவும் வித்தியாசமாக எடுக்கிறேன் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை வேறு..ஏதாவது பிற திரைச்சார்ந்த கதை அல்லது காட்சிகளின் காப்பியாக அல்லது தொகுப்பாக இருக்குமோ என்ற பயம் கொஞ்சம் எட்டி பார்க்கிறது.. 
வித்தியாசம் என்றால் காப்பி..இல்லையேல் அதே அரைத்த மசாலா..இவர்களது 
இயலாமையை வெளிச்சொல்லாமல் இதுதான் சினிமா..இதுதான் ரசனை என்று சொல்லி சாமனியனிடம் கொண்டு சேர்க்கும் வித்தைக்கு பெயர் வியாபாரம்..நல்ல உயர்த்தர ரசிகர்களை உருவாக்கும் கடமை படைப்பாளிகளுக்கே உள்ளது என்றால் மறுக்க முடியுமா..

முழுப்படத்தை சுட்டுவிட்டு புது பெயரில் ரிலீஸ் செய்து இன்ஸ்பிரசன் என்று, பேருக்கு கூட கிரடிட் கார்டுகளில் அந்த குறிப்பிட்ட படத்தையோ கலைஞர்களின் பெயரையோ போடாத கொடுமை இங்கு நடக்கிறது..இது இங்கு மட்டுமா நடக்கிறது..? என்று கேட்கலாம்..எல்லா நாடுகளிலும் இருக்கிறது...அட் லீஸ்ட் நாம் மாறலாமே..ஒருத்தர் செய்கிறார் என்பதற்காக அதே தவறுகளை நாமும் செய்யலாம் என்பது ஞாயமாகுமா?

அது போகட்டும்..அப்படியே அந்த காப்பியை மக்களில் சிலர் கண்டுபிடித்து சொன்னால்..உடனே சிலாகித்து "அந்த நாட்டு மக்களுக்கு அந்த சினிமா மூலம் கிடைத்த உணர்வை அனுபவத்தை நான் என் நாட்டு மக்களுக்கு தருகிறேன்" என்று கூறுவார்கள்..அப்படி அது எங்களுக்கு கிடைத்துதான் ஆக வேண்டுமென்றால் ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கு சப்டைட்டில் போதுமே..அது இல்லாதவர்களுக்கு உங்கள் பணத்தில் தமிழில் டப் செது கொடுங்கள்.அது போதுமே.முழுப்படமாக எடுக்கும் பட்ஜெட்டை விட இதற்கு செய்யும் செலவு குறைவுதானே.அடுத்தவர் படைப்பை அனுமதி இல்லாமல் சுடும் பழக்கத்துக்கு வழக்கமாக சொல்லும் அதே நொண்டி சாக்குகள்..    

இன்ஸ்பிரேஷன் அல்லது தாக்கமில்லாமல் புது படைப்பை உருவாக்க முடியுமா..என்று சிலர் கேட்கலாம்..ஒத்துக்கொள்கிறேன்..எந்த படைப்பும் ஒரு படைப்பின் தாக்கமோ பாதிப்போ இல்லாமல் இருக்காது..ஒன்றின் உருவாக்கத்திற்கு இன்னொன்றின் "மூலம்"-தான் காரணமாக உதவியாக இருக்கும்..ஆனால், இங்கு நடப்பது!! கிரியேட்டராக இல்லாமல் போகட்டும் விடுங்கள்..அட் லீஸ், இன்னோவேட்டராக கூட இருக்க மாட்டேன் என்று சொல்லும் திரைக்கலைஞர்களை என்ன செய்வது..  

"சாமன்யனுக்கு நான் படமெடுக்கிறேன்..அவன் 2 மணி நேரம் விசில் அடித்து எஞ்சோய் பண்ண வேணாமா..புது முயற்சி என்ற பேருல நான் ஏன் அவங்களுக்கு புரியாம எடுக்கனும்..கொடுக்குற காசுக்கு 6 பாட்டு 4 சண்டனு இருந்தாதானே சூப்பரா இருக்குமுனு" பல காலமாக இப்படியே சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கும் கலைஞர்கள் நெறைய பேர் இருக்கிறார்கள்...நான் பாமர மக்களுக்கு படம் எடுக்கிறேன் என்று சொல்லுவார்கள்...ஈரானில் கட்டட தொழிலாளிக்கூட பாமரன்-தான்..துணி விற்பவன் கூட பாமரன்-தான். அவனுக்கு ஒரு கலர் ஒஃப் பேரடைஸ், சில்ரன் ஒஃப் ஹெவென்...போன்ற அனுபவங்கள் கிடைக்கும் போது என்னை போன்ற இந்திய பாமரனின் நிலை ஏன் இப்படி..?

அதுக்காக நல்ல படங்களே இல்லையா...இருக்கிறது.சத்யஜித் ரே போன்ற மேதைகள் தந்த இந்திய சினிமாவை பார்த்து இப்படி சொன்னால்.. மிக பெரிய பாவம்.ஆனால் ஒரு சத்யஜித் ரே போதுமா..
ஜப்பான், அகிரா குரோசாவை மட்டுமே காட்டி காலம் தள்ளிக்கொண்டிருக்கவில்லை... Nagisa Ôshima, Yasujirô Ozu தொடங்கி Takeshi Kitano வரை உலக புகழோடு தனக்குள் வைத்திருக்கும் சினிமாதான் ஜப்பான்..இன்னும் பலரை உதாரணம் காட்டலாம்..

கடந்த பத்தாண்டுகளில் சில உயர்த்தர தமிழ் படங்கள் ஒரு படி முன்னுக்கு சென்றால்..கமர்ஷியல் போர்வையில் வெளிவரும் பல "மொக்கை" படங்கள் அதன் அங்கீகாரத்தை தடுக்கின்றன..ஒரு நல்ல படம் அடையும் வெற்றியை தொடர்ந்து மேற்கொண்டு முயற்சித்து அதன் வழியில் பல படங்கள் எடுக்க வேண்டாமா??அதனை வெற்றிப்பெற செய்யும் ரசிகர்களின் ரசனையை வரவேற்காமல், "பழைய சோறையே" புதுத் தட்டில் போட்டுத்தர துடிக்கும் நபர்களை என்னவென்று சொல்வது..காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற சூழ்நிலையில் இது போன்றவர்களின் சில தவறுகள்..நம்மை உலக அரங்கில தலை நிமிர செய்ய முடியாமல் இருக்கிறது..
   
உலக சினிமா அறிமுகமான நேரத்தில் கேன்ஸ் வரை சென்ற மை மேஜிக் (2008) என்ற சிங்கப்பூர் படத்தின் அறிமுகம் கிடைத்தது..சீன இயக்குனர் எரிக் கூ எடுத்த தமிழ் படம்..கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது..ஒரு சீனர் எடுத்த தமிழ் படமா..தமிழன பத்தி தமிழன் எடுத்தாலே நல்லாருக்க மாட்டேங்குது..இதுல இது வேறயா என்ற அலட்சியத்தில் தான் படம் பார்த்தேன்..அநேகமாக கேன்ஸ் விழாவில் (பால்மர் டி ஓர்) விருதுக்கு போட்டியிட்ட முதல் தமிழ் படமது.வெற்றி பெறவில்லை-தான்.இருந்துவிட்டு போகட்டும்.என்றாலும் அந்த ஆண்டின் சிறந்த படமாக ப்ரான்ஸ் நாட்டு சஞ்சிகையே வெளியிட்டது..அதுவும் சீனர் எடுத்த சிங்கப்பூர் தயாரிப்பு..எத்தனை பேருக்கு இந்த படம் தெரியும் என்று தெரியவில்லை..கிடைத்தால் பாருங்கள்..தமிழில் சமீபத்தில் நீங்கள் வியந்து பார்த்த, சிறந்ததாக கருதிய சில தமிழ் நாட்டு படங்களுக்கு கொஞ்சமும் சலைத்ததில்லை..ஆக சிறந்த எதார்த்தமான தமிழ் மொழி படங்களில் டாப்-லிஸ்ட்டில் வைப்பீர்கள்..

ஒரு சீனரால் சாத்தியமானது ஏன் தமிழரால் முடியவில்லை..என்ற சிந்தனைக்கு வருவீர்கள்..சினிமா, மொழி-இனம்-மதம் போன்ற விஷயங்களை தாண்டியது என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம்..அதே கேன்ஸில் சென்ற ஆண்டு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு-தமிழ் படமான தீபன் சமீபத்தில் பார்க்க கிடைத்தது..தமிழர்களை பற்றிய படத்தை, தமிழ் மொழி சினிமாவை வேற்று மொழிக்காரர்கள்-தான் வாழ வைக்க வேண்டிய சூழ்நிலை..ஆஸ்கரை குறை சொல்பவர்கள் சொல்லட்டும்..அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றே நம்புவோம்...சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை கேன்ஸ் பட விழாவுக்கு உண்டு..என்ன மொழி பேசுகிறார்கள் கூட சொல்லும் அளவுக்கு பலத்தர "சினிமா"வை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது..அங்கு பேசப்படும் தமிழ் மொழியை உலகின் மிக சிறந்த சினிமா கலைஞர்கள் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போதே உச்சிக்குளிர்கிறது..வேற்று இனத்தவருடன் சினிமா பற்றி பேசும் போது "அது என் மொழிடா" என பெருமைக்கொள்ள முடிகிறது..அந்த பெருமை இன்னும் தொடர வேண்டாமா...??    
 கமர்ஷியல் படங்களை தொடக்கி வைத்த ஹாலிவுட் சினிமாவில் கூட எத்தனையோ நல்ல தரமான படங்கள் வருகின்றன..ஆனால் டப் செய்யும் போது கூட ஹாலிவுட் மசாலா-வையே பார்த்து பார்த்து மொழிமாற்றம் செய்பவர்களை நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை..

நான் பார்த்த வரையில் கடந்த சில வருடங்களில் என்னை வெகுவாக கவர்ந்த சில தமிழ் படங்கள் இவை:
Irudhi Suttru, Visaranai, Zero, Joker, Kuttrame Thandanai,36 Vayadhinile, Demonte Colony, Kaaka Muttai, Kuttram Kadithal, Thegidi, Vaayai Moodi Pesavum, Kathai Thiraikathai Vasanam Iyakkam, Pisasu, Kadhalum Kadanthu Pogum, Azhagu Kutti Chellam, Vennira Iravuggal (மலேசியா)


சில நாட்களுக்கு முன்பு குற்றமே தண்டனை படம் பார்த்து முடித்த போது தோன்றிய சில எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன். 2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக நினைக்கிறேன்..இது போன்ற படங்களை ரசிக்கும் ஒரு சிறிய பார்வையாளனாக எழுதிய கருத்துக்கள் இவை..யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் காயப்படுத்துவதற்காக எழுதியவை அல்ல..இதில் சில குறைகளும் இருக்கலாம்.ஏதாவது தவறு இருப்பின் மன்னிப்பு கேட்டு விடைப்பெறுகிறேன்..அடுத்த பார்வையில் சந்திக்கும் வரை நான்.

2 comments:

  1. உங்களோட வருத்தத்தை சொல்லி இருக்கீங்க.ஏதோ ஒரு படத்தில் நீ அவார்ட் வாங்க படம் எடுப்ப வாங்கிட்டும் போய்டுவ பணம் போட்ட நான் என்ன பண்ணுவேன்.இதை தான் அனைத்து தயாரிப்பாளர்களும் விரும்புறாங்க இயக்குனர்களும் கமர்சியல் படம் ரொம்ப ஈசியா கொடுத்து விட்டு போய் விடுகின்றனர்.முன்பு ரசிகனும் அதை தான் விரும்பினான் கொஞ்ச காலமாய் அப்படி இல்லை நல்ல படங்களையே விரும்புகிறான்.அதுவும் இணைய வசதி உள்ளவர்கள் மட்டும் தான் நல்ல படங்களை பார்க்கும் கூட்டத்தில் உள்ளார்கள்.கமர்சியல் என்கிற விசயத்தில் அஜித் விஜய் அடுத்த தலைமுறை நடிகர்களும் அங்கு தான் வருகிறார்கள் ரெமோ ரெக்க.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து சகோ..நீங்கள் சொல்வதும் உண்மைதான்..வருகைக்கு நன்றி..

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...