Sunday 28 October 2012

A Walk To Remember : காதல் கனவாக..


காதலர்கள் இருவர், வழக்கமாக தெருவில் கைக் கோர்த்தப்படியே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.. அவன் பேசி வர..அவள் முகம் ஏதோ சொல்கிறது..என்ன அது என தெரிவில்லை.ஆனால், அது ஏதோ பெரிய ஏமாற்றத்தை பிரதிப்பலிக்க போவதை கண்கள் நிரூபிக்கின்றன.

அதில் ஆண், "நீ என்ன உனது கல்லூரி படிப்பை எண்ணி வருத்தப்படுகிறாயா ?" என கேட்க, அவள் "இல்லை..நான் கல்லூரிக்கு எப்லிக்கேஷனே போடப்போவதில்லை" என பதிலளிக்கிறாள்.மௌனம் காக்காது உடனே அவள், "எனக்கு உடம்பு சரியில்லை" என்று கூறுகிறாள்.

சிந்திக்காத காதலன், "இருக்கட்டும் சரி, இப்போது உன்னை உனது வீட்டுக்கு..." என்று சொல்ல வந்ததில் குறுக்கிட்டவள் மீண்டும் "உடம்பு சரியில்லை..எனக்கு லியூக்கீமியா இருக்கிறது" என சட்டென சொல்லி முடிக்கிறாள்.முகம் மாற அவனும், சோகக்கடலான கண்களில் அவளும்...மனம் நிறைந்த சந்தேகத்துடன், குரலில் இல்லையென சொல்கிறான்."உனக்கு 18 வயதுதான் ஆகுகிறது..உனக்கு ஒன்றும் இல்லை, நீ ஆரோக்கியமாக இருக்கிறாய்" என்கிறான்.குரல் மங்கிய நிலையில்.

தனக்கு இந்த நோய் இருப்பது இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரியவந்ததாகவும்..சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டதாகவும் என்று, அத்தனை மரண ரகசியத்தையும் நான்கே வரிகளில் பேசி முடித்து ஓடுகிறாள்.

அவன் கலங்கி நிற்கிறான்..அவள் சொன்னதில் எது காதில் விழுந்ததோ இல்லையோ ?? அவள் தன்னை விட்டு போக போகிறாள் என்ற எண்ணமே அவனுக்கு இடியாகிறது.

வார்த்தைகளாக படிக்க மேலுள்ள சூழல் எப்படியோ.நான் அறியேன்ஆனால், படமாக பார்க்க தாக்கிவிட்டது.. அவ்வளவு மென்மையான காதல் சித்திரத்தில் சூறாவளியா என்ற எண்ணமே ஜாஸ்த்தியானது.இரவு தூங்கவும் லேட்டானது.அவ்வளவு எளிதாக மறக்கக்கூடிய படமல்ல இது என்பதை என் சின்னப்பிள்ளை மனம் பிறகே உணர்ந்துக்கொண்டது.

 1999 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஸ்பார்க் அவர்கள் எழுதிய நாவலின் தழுவலில், அவனாக ஷான் வெஸ்ட் மற்றும் அவளாக மேண்டி மூர் முறையே லேண்டன் மற்றும் ஜெம்மி சுலிவன் என்ற கதாபாத்திரங்களில் வாழ, 2002ல் வெளிவந்த மெல்லிய சோகங்கள் பேசும் காதல் படைப்புதான் எ வாக் டூ ரிமேம்பெர்.அடாம் ஷாங்க்மான் இயக்க, கரேன் ஜன்ஸென் திரைக்கதையை புனைந்துள்ளார்.

தந்தையை பிரிந்து தன் தாயோடு வாழ்ந்து வரும் லேண்டனுக்கும் பாதிரியாரின் மகளான ஜெம்மி சுலிவனுக்கும் இடையில் நிகழும் சந்திப்புகளையும் பள்ளி காதலையும் பேசும் அழகோவியம்.இது போலான ஒரு அழகிய காதலை, கவியாக படத்தில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது.லேண்டன் மற்றும் ஜெம்மி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளை எப்படி வர்ணிப்பது ? பார்த்து அனுபவிக்க வேண்டியதில் ஒன்று அது.

அவன் அவள் அருகில் செல்ல - அவள்
கண்ணம் சிவக்கும்...கவிப்பாடும்..
முத்தம் என்ற மௌன மொழியில்

ஜெம்மியாக மேண்டி மூர் : அழகிய தோற்றமும் கள்ளம் கபடமற்ற முகத்தோடும் படம் முழுக்க அவரிடத்தில் விழவைக்கிறார்..கூடவே அழுகையும் தருகிறார்.இனிமையான நடிப்பை பார்த்துள்ளேன்.இனிப்பை தரும் நடிப்பை முதல் முறையாக இவரால் அறிந்துக்கொண்டேன்.

லேண்டனாக ஷான் வெஸ்ட் : இவரது நடிப்பில் இதற்கு முன்னம் எந்த படமும் பார்த்ததில்லை.இனிமேல் பார்த்தாலும் மனம் முழுவது லேண்டானகவே தெரிவார் என்பது மட்டும் உறுதி.சிரிக்கிறதுக்கு விலை பேசும் இறுக்கமான முகத்தோடு காதல் வயப்படுவதும், தன் வாழ்க்கையையே மாற்றிய காதலி இறக்கப்போகிறாள் என்றதும் பகையாளியாக மதித்த தனது தந்தையை அனுகும் போதும் அருமையான நடிப்பின் வெளிப்பாடு.அதுவும் மேலே சொன்ன சூழலில் அவர்கள் இருவரது நடிப்பை பார்க்கனுமே அவ்வளவு இயல்பு.
சில திரைப்படங்களை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடிவதில்லை.அது போன்றவைகள் எத்தனை முறைகள் பார்த்தாலும் திகட்டாது. மென்மேலும், புது நினைவுள், கருத்துக்களை அது பதிவு செய்ய வேண்டும்.அதுவே என்னைப் பொருத்தவரையில் சிறந்த படைப்பாகும்.அது அத்தனையும் கொண்ட எ வாக் டூ ரிமேம்பரை இதுவரை ஐந்து முறை கண்டு விட்டேன்.மேலும், ரசிப்பேன் என்பது மட்டும் உறுதி.

என்னையும் காதலிக்க சொன்ன திரைப்படம் இது.காதலில் விழுவேனா என்பது சந்தேகம்தான்.. காரணம், காதல் என்னை காதலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எதிர்ப்பார்ப்பும் முற்றிலும் இல்லை, 
வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் நம்மை விட்டு கடந்துப்போன உறவுகளை ரொம்பவும் எளிதாக மீட்டிப்பார்க்க உதவும் தருணங்களாக  ..உங்கள் மனதிலும் நடமாடக்கூடும்.

ஓர் அழகான படைப்பை தேடுபவர்கள், தங்களது பழைய காதலை அசைப்போட துடிப்பவர்கள், காதலிப்பவர்கள் இனிமையான காதலை திரையாக பார்க்க ஆவலோடு இருப்பவர்கள் கட்டாயம் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.உண்மையான உள்ளத்து அன்பையே மையப்படுத்தி சொன்ன காதல் சித்திரம்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...