Follow by Email

Tuesday, 11 August 2015

Sergio Leone Masterpieces..

திரைப்பட மாணவர்களுக்கு இவர் ஒரு பாடம், திரை ரசிகர்களுக்கு இவர் ஒரு கொண்டாட்டம்..கிளாசிக் வெஸ்டர்ன் படங்களுக்கு புது மரியாதையும், புது அத்தியாயத்தையும் உருவாக்கி தந்த உன்னதமான சினிமா மேதை.
இத்தாலியில் ஜனவரி  மூன்றாம் திகதி 1929-ஆம் ஆண்டு பிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.விக்டோரியோ டி சிக்கா இயக்கிய பைசிக்கல் டீஃப் என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய லியோனி, தொடர்ந்து Quo Vadis (1951) மற்றும் Ben-Hur (1959) போன்ற சர்வதேச மிக பெரிய பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டு விருதுகளையும் வசூலையும் வென்று குவித்த படங்களில் துணை இயக்குனராக பணிப்புரிந்தார்.அதே வேளையில், அப்பொழுது தயாரிப்பில் இருந்து சில காரணங்களால் முழுமை பெறாது தவறிப்போன The Last Days of Pompeii (1959) என்ற படத்தின் ஒரு பகுதிக்கு இயக்குனராக பணிப்புரியும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது. 

1950-ஆண்டுகளில் பல வரலாற்று கதைகள், கத்தி சண்டைகள் நிறைந்த சாகச கதைகள் போன்றவற்றில் ஆர்வங்கள் கொண்டிருந்த லியோனிக்கு, முதல் வாய்ப்பாக அமைந்ததுதான் The Colossus of Rhodes (1959) என்ற சாகச படம்.இதன் மூலம் தன்னை திறமிக்க, இத்தாலியில் கவனிக்கத்தக்க இயக்குனராக அடையாளம் காட்டிக்கொண்டார்.சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு நிகரான படங்களை எடுக்கும் பாணியும் திறமையும் பலருக்கு தெரிய வந்தது.அதுவரை அமெரிக்க தொலைக்காட்சியில் சிறிய வேடங்களிலும் சில திரைப்படங்களில் தலையை காட்டி வந்த கிளிண்ட் ஈஸ்ட்வூட்டுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படமான A Fistful of Dollars (1964) இயக்கினார்.அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தின் தழுவலான இந்த படம் உலகளவில் வெற்றிப்பெறவே இதனது 


அடுத்த பாகங்களாக For a Few Dollars More (1965) மற்றும் The Good, the Bad and the Ugly (1966) என்ற படங்களையும் எடுத்து உலக திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெறத் தொடங்கினார் செர்ஜியோ லியோனி...பெயரில்லாத துப்பாக்கி கலைகள் தெரிந்த வாடிப்போன முகத்தோடு ஈஸ்ட்வூட் நடித்த இம்மூன்று படங்களே இன்று டோலர்ஸ் டிரைலோஜியாக விளங்குகிறது.இத்தாலியில் சிறிய பட்ஜெட்டில் உருவெடுத்த இப்படங்கள், உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது.சிறிய வயதில் தன்னுடன் படித்த பள்ளி நண்பனான என்னியோ மொரிக்கொன் என்ற இசையமைப்பாளருடன் இவர் இணைந்து உருவாக்கிய புதுமையான வெஸ்டர்ன் வாசங்கள் வீசும் சப்தங்கள், டீம் இசையென்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டன.இன்றுக்கூட வெஸ்டர்ன் படங்கள் என்று சொன்னாலே இந்த இசை தான் ஞாபகத்தை எட்டும் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் வெற்றிக்கு கூடுதல் காரணமாகவே அமைந்தது.


டோலர்ஸ் டிரைலோஜிக்கு பிறகு, வெஸ்டர்ன் படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்த லியோனிக்கு மேலும் ஒரு சவாலாக சிறந்த வாய்ப்பாக அமைந்தது ஹேன்ரி ஃபோண்டா மற்றும் சார்ல்ஸ் பிரோஸன், ஹார்மோனிக்காவாக நடித்த Once Upon a Time in the West (1968) என்ற இன்னொரு வெஸ்டர் படம்தான்..அமெரிக்க ஸ்டூடியோவான பாராமௌண்ட் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த படத்தை இயக்கி கொடுத்தார்.தன்னுடைய நீண்ட கால நண்பர்களான Sergio Donati மற்றும் Ennio Morricone முறையே துணை திரைக்கதை மற்றும் இசை அமைக்க, பின்னாளில் திரைப்பட இயக்குனர்களாக உருவான Bernardo Bertolucci மற்றும் Dario Argento ஆகியோர் கதையை புனைந்தனர்.பல அமெரிக்க வெஸ்டர் படங்களின் தாக்கங்கள் நிறம்பி வழிந்தாலும், லியோனியின் இயக்கமும் நடிப்பும் இப்படத்தை உயர்ந்து நிற்க செய்தது. உலக அளவில் இதுவரை எடுக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களிலேயே சிறந்த படைப்பாகவும் இது கருதப்படுவது குறிப்பிடதக்கது.

அதனை தொடர்ந்து, 1973 ஆம் ஆண்டு வந்த Duck, You Sucker! (1971) என்ற படம் மேலும் லியோனிக்கு புகழை தேடி தந்தது.இம்முறை மெக்ஸிகோவின் புரட்சியை பின்னனியாக வைத்து திரைக்காட்சிகளை பின்னியிருந்தார்.இதன் பின், திரைப்பட இயக்கத்திலிருந்து வெளிவந்து My Name is Nobody (1973), A Genius, Two Partners and a Dupe (1975 போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் லியோனி..

The Hoods  என்ற தனக்கு பிடித்த நாவலுக்கு திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாகவே லியோனிக்கு இருந்தது.1920 மற்றும் 1930-களில் நியூயோர்க் நகரத்தில் வாழ்ந்த யூத குண்டர்களை பற்றிய கதை இது.இக்கதைக்காகவே, முதலில் கிடைத்த காட்ஃபாதர் (1972) படத்தை இயக்கும் வாய்ப்பையே புறக்கணித்தார்.இந்த படம் பின்னாளில் போர்ட் கொப்போலா இயக்கத்தில் சிறந்த படமாக வந்தது அனைவரும் அறிந்ததே.பல வருடங்கள் கழித்து இறுதியில் இந்த கதையை ரோபெர்ட் டி நீரோ மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் நடிப்பில் சுமார் நான்கு மணி நேரங்கள் நெஞ்சை அள்ளும் படைப்பாக Once Upon a Time in America (1984) தந்தார்.இத்திரைப்படம் முதல் முறையாக லியோனிக்கு சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் மற்றும் பாஃப்தா பரிந்துரைகளை பெற்று தந்தன.

வெஸ்டர்ன் மட்டுமல்லாது சினிமாவுக்கு புதிய பரிணாமத்தை வழங்கிய செர்ஜியோ லியோனி என்ற சினிமா ராஜ்யம் ஏப்ரல் 30 ஆம் திகதி 1988-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.தன்னுடைய 60 ஆவது வயதில் மாரடைப்பில் காலமானார்.மொழி, நாடு என்று பலவற்றை கடந்து சினிமா உலகில் பலரையும் கவர்ந்த சிறந்த கைத்தேர்ந்த படைப்பாளிகளில் ஒருவராக லியோனியை சொல்லலாம்.பல புகழ்பெற்ற கலைஞர்களை திரைப்படத்துறைகளுக்கு அறிமுகபடுத்தியதோடு புகழ்ப்பெற செய்ததற்கும் காரணமாக இருந்த லியோனி, இன்று படைப்புகளின் மூலம் உயிர் வாழ்கிறார் என்பதே உண்மை..இவர் எடுத்த படங்கள் வெறும் வெஸ்டர்ன் மற்றும் சாகச படங்கள் மட்டுமில்லை, உண்மையாக கலையை நேசித்த, பல திரை யுக்த்திகளை வழங்கிய மனிதனின் காவியங்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து..ஒரு சினிமா ரசிகர்களாக இருந்து இவரது படங்களை மறக்காமல் இருப்பதே இவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய விருது மற்றும் கடமை என்று நினைக்கிறேன்.   

@@ செர்ஜியோ லியோன் - உலக விருதுகள் பெறாத பல சினிமா உள்ளங்களில் வாழும் கலைஞன். @@  

 அடுத்தடுத்த பாகங்களில் செர்ஜியோ லியோனியின் டோலர் டிரைலோஜி மற்றும் பிற படைப்புகளை சிறு பார்வைகளாக பார்க்கலாம்.அதுவரை,உங்கள் ஆதரோவோடு,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge