Monday 3 August 2015

Yojimbo (1961) பாகம் இரண்டு

-----------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------
திரைக்கதையின் முழு வேகமே நடிகர்களின் நடிப்புதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை..அந்த வரிசையில் ஒவ்வொருவரும் தத்தம் கதாபாத்திரத்தில் தனித்து நிற்கின்றனர்.குறிப்பாக, ஹிரோவுக்கு ஒரே ஆதரவாக, நண்பராக வரும் Eijirō Tōno - வின் நடிப்பு அருமை..வாடிப்போன ஊரில் ஏன் வாழ்கிறோம் என்றுக்கூட தெரியாது வந்து கோஞ்சி என்ற கதாபாத்திரத்தில் வாழ்கிறார்.வெறுப்பு, விருப்பு அத்தனையும் எளிதாக அந்த முகத்தில் பேசுகிறது.படம் ஆரம்பித்ததும் இதில் வில்லன் யாரு என்ற கேள்வி வந்தது.காரணம், A Fistful of Dollars (1964) படத்தில் வில்லனாக Gian Maria Volonté நடித்து அசத்திருப்பார்..அந்த கதாபாத்திரம் இதில் எப்படியோ என்று நினைக்கும் பொழுது Tatsuya Nakadai, உனோசுகே என்ற கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார்.ஹீரோ, அவரைசுற்றி காட்சிகள் என்பதால் படத்தில் பெரிய அளவில் சொல்லக்கூடிய கதாபாத்திரங்கள் குறைவே.ஆனால், அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
இப்பொழுதெல்லாம் திரைப்படங்களில் வில்லனும் அவரது ஆட்களும் நகைச்சுவை உணர்வுகளோடு நடந்துக்கொள்வது வழக்கமாகி விட்டது.ஆனால், இதனை 50 ஆண்டுகளுக்கு முன்பே, என்னதான் கதை வேகம் குறையாது சீரியஸாக நகர்ந்தாலும், சில சில நகைச்சுவை ஐட்டங்களை காட்சிகள் நடுவே மேலோட்டமாக கலந்து பார்ப்பவர்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருப்பது அகிராவின் ஸ்டைல்.கொஞ்சம் கூட இரக்கமும் பரிதாபமும் இல்லாத வில்லன் கூட்டங்களில் இந்த நகைச்சுவையை எப்படி பயன்படுத்தினாலும் தப்பாகிவிடும்:கான்செப்ட் குலைந்துவிடும் : ரசிகர்களின் கோனத்க்தை மாற்றிவிடும்.அதை நன்கு உணர்ந்து சாமர்த்தியமாக கையாண்ட திரைக்கதை ஆசிரியர்களான Akira Kurosawa மற்றும் Ryuzo Kikushima-வை பாராட்டியே ஆகவேண்டும்.படத்தில் நகைச்சுவைக்கு முதன்மையாக Daisuke Katவை கையாண்டு இருக்கின்றனர்.குண்டு உடலுடன் பேக்குத்தனமான ஈனோகுச்சி என்பவராக வருகிறார்.அவர் பார்வையும் உடல் மொழியும் பெருமளவில் ரசிக்கவைக்கிறது.         
பல நல்ல காட்சிகள் படம் முழுவதும்..
ஒரு கும்பலில் மூன்று பேரை நறுக்கி தன்னுடைய வீரத்தை காட்டி, இன்னொரு எதிரி கும்பலில் வேலைக்கு சேர்வதும்.ஒரு பலசாளி வந்த தைரியத்தில் அந்த கும்பலுடன் சண்டை இட ஏற்பாடுகள் செய்ய இந்த கும்பலில் மட்டுமல்ல நான் எந்த கும்பலின் ஆளும் இல்லை என்றும் கூறிவிட்டு மேலே உயரமாக இருக்கும் இடத்தில் அமர்ந்து, சண்டை என்று சொல்லிவிட்டு இந்த இரண்டு கும்பல்களும் செய்யும் சேஷ்ட்டிகளை நகைச்சுவையோடு படமாக்கி இருக்கின்றனர்.
சில நேரங்களில் "இந்த ஆளுக்கு ஏன் இந்த வம்பு, பேசாம வந்தோமா போனோமா என்று இல்லாமல் கொடியவன அழிக்கிறேன், மக்களை காப்பாற்றுகிறேன் என்று இருக்கிறானே" என்று மனதுக்குள் சில வார்த்தைகள் வந்தன.அதுவும் ஒரு தாயையும் அவரது குழந்தை மற்றும் கணவரோடு சேர்த்துவிட்டு கூடவே வில்லனிடம் அடிவாங்கும்போது தேவையா ? இது என்று நினைத்தேன்..காரணம் அந்த சாமுராய் இவை அனைத்தும் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை

நடிப்பு, இயக்கம், திரைக்கதை போன்றவைகளுக்கு பிறகு படத்துக்கு மிக பெரிய துணையாக வலு சேர்ப்பது ஒளிப்பதிவும் இசைதான்.கருப்பு வெள்ளையில் படம்.அதுவும் சாமுராய் படம்.சாமுராய் படங்கள் சினிமா உலகுக்கு புதிதும் இல்லை.அதை எவ்வளவு அழகாக மேலும் சிறப்பை கூட்டி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கச்சிதமாக இருக்கிறது Kazuo Miyagawa மற்றும் Takao Saito - வின் கேமரா அசைவுகள்.குறிப்பாக சண்டை காட்சிகளில், அதுவும் கிளைமக்ஸில் காற்று பறக்க சாஞ்சூரோவும் பகைவர்களும் போடும் வால் சண்டை அற்புதமாக இருக்கும்.அதோடுஇன்னும் ஒரு காட்சியை சொல்லியே ஆக வேண்டும்.
கிளைமக்ஸில் கோஞ்சி (Eijirō Tōno) தூக்கில் தொங்கவிட்டதுப்போல் கீழே இருந்து கேமரா மேல் நோக்கி வர, அந்த ஒரே ஃப்ரேமில் மட்டும் கிளோஸ் அப்பில்  கோஞ்சியின் முகம், பாதி தூரத்தில் வில்லன் கூட்டம் அங்கிருந்து நீண்ட தூரத்தில் லோங் ஷாட்டாக சாஞ்சூரோ நிற்பதாக அது அமைக்கப்பட்டிருக்கும்./அந்த காட்சி முழுவதையும் என்னால் வார்த்தைகளால் கூற இயலாவிட்டாலும், படத்தில் சிறப்பாக கவர்ந்த ஒன்று.அடுத்து இசை, அந்த டீம் இசை ஒரு விதமான மகிழ்ச்சியை அளிக்கிறது.புதுமையாகவும் இருந்தது.அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இருந்த Masaru Sato-க்கு என் நன்றிகளை சொல்ல வேண்டும்.பொதுவாக வெஸ்டர்ன் திரைப்படங்களில் ஒரு விதமான கலாச்சார அமைப்பு இருக்கும்.காய்ந்து வரண்டு போன நிலப்பரப்புகள், மலைத்தொடர்கள், வரிசையான வீடுகள், எண்ணெய் வைக்காத தலைமுடி, அழுக்கு சட்டை, சோள உணவு என்று பலதரப்பட்ட அம்சங்கள் கலந்திருக்கும்.
இது பெரும்பாலும் பழைய அமெரிக்க வெஸ்டர்ன் படங்களின் வழி வந்தவையே.ஹீரோ ஊர் மக்களை காப்பாற்றுவது, தங்க புதையல்களை தேடிச்செல்வது என்று ஒரே மாதிரியான கதைகள் பல படங்களில் எடுக்கப்பட்டிருக்கும்..இதை மையமாக கொண்டே சில மாற்றங்களுடன் ஜப்பானிய கலாச்சாரத்தை உள்ளடக்கி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.தொடக்க காலத்தில் அதாவது 1940, 1950 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பல கௌபாய் படங்களின் தாக்கங்கள் இதிலும் வழிந்தோடுகின்றன.இதனை பின்னர் இயக்குனர் அகிராவே சில இடங்களில் சொன்னதாக தெரிகிறது.
எ ஃபிஸ்ட்ஃபுல் டாலர்ஸ் படம் எப்படி யோஜிம்போவின் தழுவல் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றதோ அதே போல் யோஜிம்போ பழைய அமெரிக்க வெஸ்டர்ன் படங்கள், கதைகளின் தழுவல் என்றுக்கூட ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது..இதில் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று Red Harvest / ரெட் ஹார்வெஸ்ட் என்ற நாவல்தான்.Dashiell Hammett. என்ற பிரபல கிரைம் எழுத்தாளரின் கைவண்ணத்தில் 1929-ஆம் ஆண்டு வெளிவந்த இப்புதினம், யொஜிம்போவின் கதையம்சத்தை அப்படியே கொண்டுள்ளது குறிப்பிடதக்கதாகும் (நாவலை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்தேன்).அதோடு, இதே எழுத்தாளரின் திரைக்கதை அமைப்பில் வந்த தெ கிளாஸ் கீய் படம், 1942-ஆண்டு Stuart Heisler இயக்கத்தில் வெளிவந்தது.இந்த படத்தின் சில காட்சிகளும் யோஜிம்போ படத்தோடு ஒன்றியே போகின்றது.குறிப்பாக, சாஞ்சூரோவை வில்லன் கூட்டம் பிடித்து அடித்து துன்புறுத்தும் காட்சி.அச்சு அசலாக அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளதாம்.
உண்மையில் ஒரு படைப்பின் உந்துதலில் உருவாகுவதே இன்னொரு படைப்பு.ஒரு விதத்தில் ரெட் ஹார்வெஸ்ட் என்ற நாவலையும், கிளாஸ் கீய் என்ற படத்தையும் பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பதே சர்வ தேச சினிமாவில் கொண்டாடப்படும் யோஜிம்போவினால்தான்.அதற்கு அடியேனே மிக பெரிய உதாரணம்..இது பலருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பல ஹாலிவுட், உலக படைப்புகளுக்கும் யோஜிம்போ திரைப்படம், கதை, கதாபாத்திர அமைப்பு, காட்சி வடிவங்கள் என்று ஒரு சிறந்த முன்னோடியாக, வழிக்காட்டியாகவே  விளங்கி வருகிறது. இதற்கு உதாரணமாக A Fistful Of Dollars (1964), Last Standing Man (1996), The Warrior and the Sorceress (1984), Lucky Number Slevin, Sukiyaki Western Django போன்ற படங்களை தாராளமாக கூறலாம்..இறுதியாக யோஜிம்போ ஒரு அற்புதமான திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை.பல வெஸ்டர் படங்களின் மீது ஆர்வங்கள் நிறைந்தவர்கள், சினிமாவை தீவிரமாக மதிப்பவர்கள், நல்ல அறிமுகத்தை விரும்புவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு.அகிரா குரோசாவா என்ற இயக்குனரை பற்றி தெரியாதவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்தும் தொடங்கலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...